தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தனியார் நிறுவனங்கள், வங்கி பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்ததோடு, ஊழியர்களை தொழிற்சாலைகளின் வாகனங்களிலேயே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், இரு சக்கர வாகனங்களில் ஆலைகளுக்கு வரவழைக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது ஊழியர்களை முழு ஊரடங்கு நேரத்திலும் பணிக்கு வரும்படி பணித்துள்ளது. அவ்வாறு வராவிட்டால் பணி நீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வாட்ஸ் அப் குரூப் உரையாடலை ட்விட்டரில் பகிர்ந்த ஊழியர் ஒருவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து பயனர் ஒருவர் அந்த ட்வீட்டை பகிர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் tag செய்திருந்தார்.
அந்த பதிவிற்கு பத்தே நிமிடங்களில் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த விவகாரத்தை எனது பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவரது உடனடி பதிலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.