தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.கவினர் கலந்துகொண்டு, பலியானவர்களில் 13 பேரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட முடி திருத்துவோர் சங்கத்தை சேர்ந்த சுமார் 600 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்.பி, “ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறும் நடவடிக்கையை, பதவியேற்ற இரண்டு வாரத்தில் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.