தமிழகத்தில் நிலவிவரும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள டெல்டா மாவட்டங்கள், இதேபோல் தென்கடலோர உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், இதேபோன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தொடர்ந்து 3, 4 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11:30 மணி வரை கடலில் அலையானது சுமார் 2 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 23ம் தேதியன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது சென்னை மாநில மையம் அறிவித்துள்ளது.