தமிழ்நாடு

“கலால் வரி வருவாய் எங்கு போனது? தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன?” : நிதி அமைச்சர் பேட்டி!

“ஓர் அரசு எப்போதும் திவால் நிலைக்கு போகாது. அரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.”

“கலால் வரி வருவாய் எங்கு  போனது? தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன?” : நிதி அமைச்சர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக அமைந்துள்ள அரசில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதி நிலை சார்ந்த தனது திட்டம் குறித்து ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியின் தமிழாக்கம் வருமாறு :

முன்னர் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மாநிலத்தில் நிதி நிலை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி அதுகுறித்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமறு வலியுறுத்தி வந்தீர்கள். தற்போது ஒரு நிதி அமைச்சராக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

நிதி அமைச்சர் : எனது முதல் பணி நானே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவது. ஒரு எம்.எல்.ஏ வாக, முன்னாள் வங்கியாளராக, வங்கி ஒன்றின் முன்னாள் மேலாண் இயக்குநரான நானே, நமது மாநிலத்தின் நிதி நிலையை புரிந்து கொள்ளவில்லை என்றால் சாதாரண குடிமகன் எவ்வாறு அதைப் புரிந்துகொள்வார்.

துறைக்கு உள்ளேயே சீராய்வு கூட்டம் நடத்தி அந்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிடாமல் இருக்க என்னால் முடியும். ஆனால், எனது தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் தெளிவாக சொல்லி விட்டார். இந்த அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்றும் மக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் தலைவர் சொல்லிவிட்டார். எனவே, மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை அறிந்து கொள்ள ஒரு வெள்ளை அறிக்கையை தயாரித்து எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து மீண்டு வர எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்?

நிதி அமைச்சர் : எனது முதல் கவனம் பண கையிருப்பு (Liquidity) குறித்தது. நமக்கு பண இருப்பு பிரச்சினை இருக்கவே கூடாது. இதில் ஆபத்தான நிலைமை நிலவுவதாக சொல்லமுடியாது. நம் முன் உள்ள அதிகபட்ச அபாயத்திலிருந்து நாம் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் உள்ள ஆபத்தான இடர்பாடு பண இருப்புதான்.

நாம் மிகப்பெரிய அளவில் கடன் சுமையை பெற்றுள்ளோம். வட்டித் தொகையும், அசல் தொகையும் மிக மிக அதிகம். இந்த தருணத்தில் நம் முன் உள்ள முதல் கேள்வி இப்போதுள்ள பண கையிருப்பு போதுமானதா? ஓர் அரசு எப்போதும் திவால் நிலைக்கு போகாது. அரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கையிருப்பில் உள்ள பணப்புழக்கம், மற்றும் காலம் அறிதலும்தான் கவனிக்கப்படவேண்டியவை.

நமது செலவினங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளும் அளவு நமது பண இருப்பு போதுமானதாக உள்ளதா என்பதுதான் கவலைக்குரிய விஷயம். நாம் என்ன செய்ய வேண்டும், எப்போது எதை முதலில் செய்ய வேண்டும் என்பது குறித்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் நமக்கு உள்ளதா?

எடுத்துக்காட்டாக கோவிட் பெருந்தொற்று போன்ற நெருக்கடி காலங்களில் நமது முதல் கடமை மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதுதான். அதன் மூலம் தேவைகளை மீட்க வேண்டும். நாம் மேற்கொண்ட நடவடிக்கை சிறந்த பேரியல் பொருளாதாரத்துக்கு (Macroeconomic) எடுத்துக்காட்டு. இவற்றை இலவசங்கள் என்று குறிப்பிடுவது மிகவும் குதர்க்கமானது.

எனது பண இருப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் முதலில் செயல்படுத்தப்படவேண்டும். அதன் பின்னர், இந்த ஆண்டின் வரவு செலவு பற்றி நான் கவனம் செலுத்த வேண்டும். பிறகு நீண்டகால தேவைக்காக மருகட்டமைபு குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

2004 முதல் 2014 வரை இருந்தது போன்று நிதிப் பொறுப்பு சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு, நாட்டின் முன்னணி மாநிலம் என்ற நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?

அதற்கு மாநிலத்தின் வருவாய் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 10.5 முதல் 11 சதகமாக இருக்க வேண்டும். பிறகு மத்திய அரசில் இருந்து 3.5 சதம் பங்கை பெற வேண்டும். நமது வருவாய்க்கும் கடன் வட்டிக்குமான விகிதம் 12 சதமாக பழைய நிலைக்கு குறையவேண்டும்.

தற்போது 25 சதமாக உள்ள மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் நமது கடன் பழைய படி 20 சதவீதமாக இருக்க வேண்டும். வருவாய், வட்டியை கட்டுப்படுத்தல், கடனை கட்டுப்படுத்துதல் ஆகியவைக்கே முன்னுரிமை வழங்கி செயல்படுவேன்.

2014ல் இருந்தது போல நமது கடன் சுமை மாநில மொத்த உற்பத்தியில் 18 முதல் 17 சதமாக குறைய வேண்டும். அவ்வாறு குறைத்தால் தமிழ்நாட்டின் நிதி கட்டமைப்பை நாம் மீள்கட்டுமானம் செய்துவிட்டோம் என்று சொல்லலாம்.

முந்தைய அ.தி.மு.க அரசு வட்டி கட்டுவதற்காக கடன் வாங்கியதாக நீங்கள் விமர்சித்து வந்தீர்கள் அதுகுறித்து...

நிதி அமைச்சர் : நிதி பொறுப்பு சட்டம் கடன் என்பது மூலதன முதலீடு செய்வதற்காக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பாலங்கள், சாலைகள், துறைமுகங்கள் கட்ட கடன் வாங்குதல்.

ஆனால் கோவிட் பெருந்தொற்றுக்கு முன் கூட, அ.தி.மு.க அரசு ஒரு ரூபாய் கடன் வாங்கினால், அதில் 50 பைசா வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட செலவிடப்பட்டுள்ளது. அதில் மீதி 50 பைசாதான் மூலதன முதலீடுகளில் செலவிடப்பட்டது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கட்டாய செலவினங்களுக்கும், சம்பளம், வட்டி கட்டுவது போன்ற விருப்ப செலவினங்கள் அல்லாத செலவுகளுக்கு கடன் வாங்குவதை வழக்கமாக்கி விட்டோம். இந்த நடைமுறையில் இருந்து நாம் விடுபட வேண்டும். இதை நான் சீர் செய்தே தீர வேண்டும்.

“கலால் வரி வருவாய் எங்கு  போனது? தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன?” : நிதி அமைச்சர் பேட்டி!

ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் கனிம சுரங்க துறையின் மூலம் வருமானம் ஈட்டும் போது தமிழ்நாடு போன்ற இயற்கை வளங்களால் அருளப்பட்ட மாநிலம் கனிம உரிமத் தொகை மூலம் வெறும் 900 கோடி ரூபாய் அளவிற்கே வருவாய் ஈட்டுவதாக ஒருமுறை கூறியிருந்தீர்கள்...

நிதி அமைச்சர் : ஒடிசா, சட்டிஸ்கர் மாநிலங்களின் வரவு செலவு திட்டத்தைப் பாருங்கள். அவர்கள் வருவாயில் கனிம சுரங்கங்கள் துறையில் இருந்து வரும் வருவாய் எவ்வளவு சதம் என்பதை கவனியுங்கள்.

இது குறித்த ஆய்வை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன் 2004 முதல் 2014 வரை நமது வருவாய் நன்றாகவே இருந்தது. மாநில மொத்த உற்பத்தியில் நமது வருவாய் 10 முதல் 11 சதமாக இருந்தது. அது எப்படி சாத்தியமானது?

டாஸ்மாக் (மது விற்பனை), கனிமங்கள், வணிக வரி, தொழில் வரி, முத்திரை கட்டணம், பத்திரப் பதிவு இவற்றில் இருந்து எவ்வளவு வருவாய் நமக்கு கிடைத்தது?

ஒவ்வொரு கணக்குத் தலைப்பிற்கும் தனி அட்டவணை தேவை. அப்போதுதான், வருவாய் எங்கிருந்து வந்தது, எங்கு தவறு ஏற்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எனது ஆரம்பகட்ட ஆய்வுகளின் படி கலால் வரியில் இருந்து வசூலாக வேண்டிய மிகப்பெரிய அளவிலான வருவாய் இப்போது கிடைப்பதில்லை.

என்ன நடந்தது? டாஸ்மாக்கில் அவ்வளவு ஊழல் பெருகிவிட்டதா? கலால் வரி எங்கு காணாமல் போனது? எனக்குத் தெரியவில்லை... அதை கண்டுபிடிக்க வேண்டும்.

ஆக! நமக்கு அந்த வருவாய் கிடைப்பதில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா..?

நிதி அமைச்சர் : ஆம். நான் ரொக்கக் கணக்கில் எதையும் சொல்லவில்லை. பொருளாதார சதவிதிதப்படி சொல்கிறேன். மாநில மொத்த உற்பத்தியில் 3 முதல் 3.5 சதம் வருவாய் கூட கிடைக்கவில்லை. இதற்கு என்ன பொருள்? எல்லாம் காற்றில் கரைந்து வானத்தில் மாயமாகிவிட்டதா? இல்லை.

அரசுக்கு வந்து சேரவேண்டிய கணிசமான இந்த வருவாய் சமுதாயத்தின் பணக்கார வகுப்பிடம் முடங்கிக் கிடக்கிறது.

இந்த வசூலிக்கப்படாத வரியை மீண்டும் வசூலித்து மக்கள் நலனுக்காக மறுபங்கீடு செய்து செலவிட வேண்டும். அதை மாநில அரசு வசூலிக்காவிட்டால் அது தன்னியல்பாகவே சமத்துவமின்மையை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மறுத்துவிடும்.

ஒருபுறம் நீங்கள் வருவாயைப் பெருக்கி அதேசமயம் மக்கள் நல திட்டங்களையும் விரிவுபடுத்த நினைக்கிறீர்கள்...

நிதி அமைச்சர் : இரண்டு விஷயங்கள் நம் முன் உள்ளன. ஒன்று அளவுகோல். ஒரு தனி மனிதனுக்கு 1 ரூபாய் கொடுப்பதற்கும் 1 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இரண்டாவது, நமது நோக்கம், சூழ்நிலை. மிக மோசமான சூழலிலும், நாம் வழங்கும் இலவசங்கள், சலுகைகள் அனைத்திற்கும் அதிகபட்சமாக 10 ஆயிரம் கோடி அல்லது 20 ஆயிரம் கோடி தேவைப்படும். ஆனால் அதே சமயம் மாநிலத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு? 70 ஆயிரம் கோடி. வருவாய் மேலாண்மையில் உள்ள போதாமையே இதற்கு காரணம்.

ஆண்டுதோறும் ரூபாய் கடனுக்கு வட்டியாக நாம் எவ்வளவு செலுத்துகிறோம்? 45 ஆயிரம் கோடி. கோவிட் நெருக்கடி போன்ற ஊரடங்கு காலத்தில், பொருளாதாரத் தேவைகள் அதல பாதாளத்தில் விழுந்து உள்ள சூழலில் நாம் மக்களுக்கு பணம் வழங்குகிறோம். இந்த சூழலில் மேற்படி நடவடிக்கைகள் சரியானவையே என்று பெரும்பாலான் பேரியல் பொருளாதார நிபுணர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு வரிவிதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக கடுமையான நிதி நெருக்கடி உருவாகி இருக்கும் சூழலில், வருவாயை திரட்ட வேறு என்ன முகாந்திரங்கள் உள்ளன?

நிதி அமைச்சர் : வரி வருவாயில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள் எங்கெல்லாம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து அவற்றை அடைக்கப் போகிறேன்.

வணிக வரி, கலால், கனிமங்கள், பத்திரப் பதிவு, முத்திரைத் தாள் மற்றும் பல்வேறு கணக்குத் தலைப்புகள் மூலமாக கிடைக்கப்படும் வருவாய் மாநில மொத்த உற்பத்தியில் எவ்வளவு என்பதன் சராசரியை கண்டறிந்த பின்னர். இந்த புள்ளி விவரங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டு அது அத்துறையின் இலக்காக நிர்ணயிக்கப்படும்.

இது சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு வருவாய் இலக்காக இவை நிர்ணயிக்கப்படும்.

கடைசியாக தமிழ்நாட்டில் இத்தகைய நடவடிக்கை எப்போது எடுக்கப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா?

நன்றி : The Hindu

banner

Related Stories

Related Stories