சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெரு, செல்லம்மாள் தோட்டம் மற்றும் கெனால் பேங்க் சாலை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசியிடும் முகாமை தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர், அம்பேத்கர் நகர், முத்தையா தெரு, குதிரை அலி மக்கான் தெருவில், 'தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்வதற்கான ஆயுதம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று மேற்கொண்டார்.
மேலும், முத்தையா தெருவில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த போது அங்கு சிதிலமடைந்த நிலையிலிருந்த பொது கழிப்பிடத்தை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்திய நிலையில், கழிப்பிடத்தை உடனே சீரமைத்துத் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 7 மாநகராட்சி வார்டுகளிலும் கொரோனா தொற்றால் வீட்டுத்தனிமையில் இருப்பவர்களின் குடும்பத்தாருக்கு 10 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி, அவர்களிடம் நலம் விசாரித்தார். அதேபோல், ராயப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அடிப்படை வசதிகள் உட்பட பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தேவையான அரசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை நேரடியாக சென்று வழங்கினார். அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இதனிடையே, செல்லம்மாள் தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி சூரியநிலா என்பவர் தனது சேமிப்புப்பணம் ரூ.1370-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அதேபோல், டி.பி. கோயில் தெருவில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வின் போது, அப்பகுதியை சேர்ந்த ஜெயா என்பவர் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1லட்சம் நிதியுதவி அளித்தார். அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
கொரோனா பேரிடர் காலத்தில் நேரடியாக களத்திற்குச் சென்று உதவி செய்து வரும் தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.