தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்படி தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் அவ்வாறு கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க கூடுதல் சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கையால், சிங்கப்பூரிலிருந்து காலி ஆக்சிஜன் சிலிண்டா்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள், 256 காலி சிலிண்டா்களை ஏற்றிக்கொண்டு சென்னை விமானநிலையம் வந்தது.
சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள், அந்த 256 காலி சிலிண்டா்களையும் பெற்றுக்கொண்டனா். அதன்பின்பு உடனடியாக லாரிகளில் ஏற்றி தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து மருத்துவமனைகளுக்கு அனுப்ப, அந்த சிலிண்டா்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதைப்போல், இரண்டாவது நாளான இன்றும், சிங்கப்பூரிலிருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள் 244 காலி ஆக்சிஜன் சிலிண்டா்களை ஏற்றிக்கொண்டு சென்னை வந்தன. முதல் விமானம் நேற்று இரவு 11.30 மணிக்கு 128 சிலிண்டா்களுடனும், இரண்டாவது விமானம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு 114 சிலிண்டா்களுடனும் சென்னை விமான நிலையம் வந்து சோ்ந்தன.
சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் அந்த 244 காலி சிலிண்டா்களையும் பெற்றுக்கொண்டனா். பின்பு லாரிகளில் திருவள்ளூா் மாவட்டம் குமிடிப்பூண்டில் உள்ள தொழிற்பேட்டைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பிரித்து அனுப்புவாா்கள்.
இந்த 2 நாட்களில் சிங்கப்பூரிலிருந்து 4 இந்திய விமானப்படை விமானங்களில் மொத்தம் 500 காலி சிலிண்டா்கள் சென்னைக்கு வந்துள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.