கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வருவாய் இல்லாத மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை கிண்டியில் அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கம் ஏற்பாட்டில் ஊரடங்கினால் வருவாய் இன்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் 5000 பேருக்கு 10கிலோஅரிசி, பருப்புஉள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உட்பட 23 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க உள்ள நிலையில் முதற்கட்டமாக இன்று 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்குச் சென்று மளிகை தொகுப்பினை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, அரசு மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் இந்நிலையில் பொறுப்புடன் செயல் பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மாற்றக்கூடாது என தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் கட்டாயமாக தொற்று பரவல் குறையும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டி அரசு கொரானா மருத்துவமனையில் முழு கவச உடை அணிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, சகாயமீனா இ.ஆ.ப. மற்றும் அங்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் கிங்ஸ் மருத்துவமனை இயக்குனர் மரு. நாராயணசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உயர் அலுவலர்கள் உடன் உள்ளனர்.