கொரோனா தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை மற்றும் அரிசி மானியத்தையும் உடனே வழங்க கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு :
கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன.
இதனைக் கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் (Zero rate) என நிர்ணயிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
1. நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி (Adhoc Grants-in-aid) அளிக்கப்பட வேண்டும்.
3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.