ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் கணமே அய்ம்பெரும் சாதனையான ஆணைகளை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. சரியான அதிகாரிகளின் தேர்வு மிகச் சிறப்பு. ‘‘முடிவுகள் அவசரமானதாக இருக்காது; மாறாக, விரைவானதாக இருக்கும்‘’ என்ற முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முறையைப் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. இதற்கு உதவிகரமாக அரசு இயந்திரம் செயல்பட வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
உழைப்பின் உருவமாகத் திகழும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
தி.மு.க. இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது என்பது புதிய விடியல் ஏற்படும் - பல துறைகளிலும் என்ற புது நம்பிக்கையை வாக்களித்தவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது; காரணம், உழைப்பின் உருவமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்திறனும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தெளிவான அணுகுமுறையும்தான்.
ஆட்சிப் பொறுப்பேற்ற அக்கணமே அவர் கையொப்பமிட்ட அய்ம்பெரும் ஆணைகள், புதிய நம்பிக்கைக்கு உத்தரவாதம் கூறி மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளன. கொரோனா வேகத்தை வீழ்த்தி, மக்கள் நலப் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக, தோழர் மா.சுப்பிரமணியத்தை நியமித்து, நேற்று (7.5.2021) மாலை முதலே அவர்கள் அனைவரும் போர்க்கால வேகத்தில் தம் பணியைத் தொடங்கிவிட்டனர்.
கொரோனா ஒழிப்புப் பணி என்ற மராத்தானிலும் வெற்றியை ஈட்டுவார் மா.சு.
பல ‘மராத்தான்களில்’ ஓடி வெற்றி பெற்ற சாதனையாளரான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு. அவர்கள் முதல்வரின் மனதறிந்து, இந்த கொரோனா ஒழிப்புப் பணி என்ற மராத்தானிலும் வெற்றியை ஈட்டுவார் என்பது திண்ணம். சரியான கூட்டுக் குழு மனப்பான்மை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று முக்கூட்டாக அமைந்து - ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டால் அது நிச்சயம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியே தீரும்.
மக்களாட்சியில் ஓர் ஆட்சி வெற்றி பெற, அதன் தலைமை அதற்கடுத்துத் துணை நிற்கும் அமைச்சர்கள் - இவர்களைத் தவிர, நேர்மையும், திறமையும், சூழ்நிலைகளைத் துல்லியமாக உணர்ந்து செயல்படும் ஆற்றல்மிக்க அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
ஆட்சியின் ‘‘கடையாணியே’’ - உருள்பெருந்தேருக்கு அச்சாணியே - நல்ல அதிகாரிகள். தவறுக்கும், ஊழலுக்கும் துணை போகாமல் சுட்டிக்காட்ட வேண்டிய உண்மைகளைத் தயக்கமின்றி முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ சுட்டிக்காட்டி, கடமையாற்றுவது நல்லாட்சியைத் தருவதற்கும் மிகவும் இன்றியமையாதவர்கள் அதிகாரிகளே! நல்ல தொடக்கமே மக்களாட்சியில் நன்னம்பிக்கையைத் தருவதாக அமையும். முதலமைச்சரின் தேர்வு - பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்!
புதிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்களையும், முதலமைச்சரின் செயலாளர்களாக மூத்தவர்களான டி.உதயச்சந்திரன், பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியவர்களை முதலமைச்சர் தேர்வு செய்து நியமித்திருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.
சென்ற ஆட்சியில், நேர்மையான அணுகுமுறைக்காக வெறும் சாதாரண பதவிக்கு மாற்றப்பட்ட ‘தண்டனையை’ அனுபவித்தும் பொறுமையோடு அதை ஏற்று கடமையாற்றத் தவறாத திறமையாளர்களான அவர்களை அடையாளம் கண்டு, பொறுப்புகளை முதல்வர் ஒப்படைத்திருப்பது, அவரது செறிவான முடிவுகள் சிறப்பாகவே அமையும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்த அதிகாரிகளும் சரி, இதுபோன்ற நேர்மையும், திறமையும், மனிதநேயமும் கொண்ட கடமையாற்றும் பல அதிகாரிகளையும் பல பொறுப்புகளில் அமர்த்தவேண்டும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், அதிகாரவர்க்கத்தை நோக்கும்போது ‘‘தமிழ்நாட்டோரை’’ காணவில்லை!
தமிழரல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு அ.தி.மு.க. தலைமை நிர்ணயித்த நிபந்தனையாக இருந்த கொடிய காட்சியே கோலோச்சியது. தலையாட்டுவதும், பரிமாற்றத்திற்கு உதவும் படையாகச் செயல்பட்ட பரிதாபம் மறுக்க முடியாத காட்சிகளாக இருந்தன!
‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து!’’
முதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு புதுத்துறை - அதற்கான ஒரு பெண் அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் அய்.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஆளுமைகளை அடையாளம் கண்டு - ‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து’’ அதனை அவர்களுடைய பொறுப்பில் ஒப்படைப்பது என்பது மிகவும் சிறப்பானதாகும்.
பழைய அ.தி.மு.க. ஆட்சியில், சில துறைகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து குறிப்பிட்ட சில அதிகாரிகளே தொடர, அந்த அமைச்சர்களே விரும்பினர் - காரணம் வெளிப்படை!
புதிய தி.மு.க. ஆட்சியில், பழைய அரசின் எல்லா அதிகாரிகளையும் மாற்றிடத்தான் வேண்டும் என்பதல்ல நமது வாதம்; அது சரியான அணுகுமுறையே ஆகா! நேர்மை, கடமை உணர்வு தவறாமை - ஒப்படைக்கப்பட்ட பணிகளை ஓய்வறியாது செய்தல் முதலிய தனித்தன்மை வாய்ந்த அதிகாரிகளையும் பயன்படுத்திடவும் நம் முதலமைச்சர் தவறமாட்டார்.
நல்ல தொடக்கம் - வாழ்த்துகள்!
முதல் நியமனங்களே முழு நம்பிக்கையை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன. முத்தமிழ் அறிஞர் முதல்வராக இருந்தபோது கூறினார், ‘‘என்னுடைய முடிவுகள் - அவசரப்பட்டவை அல்ல; விரைந்து எடுக்கப்படுபவை’’ (My Decisions are not Hasty; but Quick Decisions) அதனை புதிய முதல்வர் பெற்றுள்ளார்.
அதற்கு உதவிடும் அரசு இயந்திரம் சிறப்பாக அமைய நல்ல தொடக்கம் - வாழ்த்துகள்!