தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 125 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனக் கூறி உறுதிமொழி ஏற்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பின்னர் முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கோட்டைக்குச் சென்று, கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, பேருந்துகளில் மகளிர் மற்றும் மாணவிகளுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ள உதயசந்திரன் ஈரோடு, மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும், தொல்லியல் துறை செயலாளராகவும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழகச் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டிருந்த 5 திட்டங்களில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்திற்கான துறை உருவாக்கமும் ஒன்று. இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக இருந்துவந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.