தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது தி.மு.க.
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமையைக் காப்பதற்கும் இந்தி திணிப்பிற்கு எதிராகவும் மக்கள் தி.மு.கவிற்கு இந்த மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர்.
இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் எல்லாம் இனி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டின் முதல்வர் தலைமையிலேயே இயங்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
தற்போது மு.க.ஸ்டாலினின் கவனம் முழுவதும் கொரோனா தொற்று குறித்துதான் இருக்கிறது என்பதை அவருடன் பேசியதிலிருந்து அறிந்தேன். முந்தைய அரசு தோற்கத்தானே போகிறோம் என கடந்த இரண்டு மாத காலமாக அலட்சியமாகவே இருந்தது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பது குறித்துத்தான் என் முழு கவனமும் இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறினார். அந்தச் சவாலை அவர் சந்திப்பார். அதில் வெற்றியும் அடைவார். தமிழகத்தையும் பாதுகாப்பார்.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துன்பத்தை அகற்றுவது எப்படி என்பது குறித்துதான் அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு இது ஒரு பொற்காலம். ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளில் கிடைத்த வெற்றி தி.மு.கவால் கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.