தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி காலையில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வேட்பாளர்கள் வெற்றி முடிவுகளும் வெளிவந்தபடியே இருக்கிறது.
தி.மு.க கூட்டணி 166 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. அ.தி.மு.க கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் இருந்தபோதும், கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தி.மு.க வேட்பாளர் ஏ.ஜே.மணிகண்ணன் முன்னிலை வகித்து வந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார்.
30 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் மணிகண்ணன் 1,14,344 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தி.மு.க 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் உளுந்தூர்பேட்டை தொகுதியை கைப்பற்றியுள்ளது.