கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் ரத்த தானம் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளால் ரத்த வங்கிகளில் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ரத்த வங்கிகளில் ரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாதிப்பில்லாதவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதால் ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் உடனடியாக ரத்தம் தேவைப்படும் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் சிக்குவோருக்கு ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு தேவைப்படக்கூடிய ரத்தம் பெறுவதில் பெரிய சிக்கலை நோயாளிகள் சந்தித்து வருகின்றனர். இதனால் ரத்த சேமிப்பு வங்கிகள் தங்களுடைய அராஜகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
நோயாளிக்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டால் மற்ற நாட்களில் பெறப்படும் விலையைவிட ஐந்து மடங்கு அதிக விலையை நோயாளிகளிடம் இருந்து இந்த வங்கிகள் வசூலிக்கின்றனர். ரத்த தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தலசீமியா நோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 150 குழந்தைகளைக் காக்க உடனடியாக 300 யூனிட் ரத்தம் தேவை என மருத்துவமனை நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.