தமிழ்நாடு

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் எவ்வாறு நடைபெறும்..? - தேர்தல் முடிவு வெளியிடும் நடைமுறைகள்!

குறைந்தது ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் 4 அல்லது 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் எவ்வாறு நடைபெறும்..? - தேர்தல் முடிவு வெளியிடும் நடைமுறைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வெற்றி கொண்டாட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்த மாநில தேர்தல் ஆணையங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவிருக்கும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெறுகிறது. சான்றிதழில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடித்து 14 மேசைகள் அமைக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் 76 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. குறைந்தது ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் 4 அல்லது 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்படும். இங்கு கூண்டு அமைக்கப்பட்டு குறைந்தது 14 மேசைகளும், பெரிய தொகுதியாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல மேசைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

ஒவ்வொரு மேசையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார். மேலும் ஒரு வேட்பாளருக்கு 14 முகவர்களும் ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள். முகவர்கள் அனைவரும் கூண்டுக்கு வெளியே இருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கையின்போது போடப்பட்டுள்ள மேசையில், ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் பதிவான கட்டுப்பாட்டு இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விபரங்கள் கன்ட்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு இயந்திரத்தை முகவர்களுக்கு தூக்கி காட்டுவார்.

முதலில் பட்டனை அழுத்தியதும் எந்த சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி என்ற விபரம் திரையில் தெரியும், இதைத் தொடர்ந்து எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர், மொத்தமாக பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது திரையில் தெரியும். இதைத் தொடர்ந்து எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது திரையில் தெரியும்.

வாக்குப்பதிவு முடிந்த பின்பு 17 சி விண்ணப்பம் மூலம் ஒரு வாக்குசாவடியில் பதிவான வாக்குகளில் விபரங்கள் கட்சி முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கும். வாக்கு எண்ணிக்கையின்போது இதை ஒப்பிட்டு, பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் கட்சி முகவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

இவ்வாறு வேட்பாளர்களுக்கு பதிவான மொத்த வாக்குகள் தெரிவிக்கப்பட்ட பின்பு கடைசியாக நோட்டாவில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும். இதோடு அந்த இயந்திரம் மூடி பாதுகாப்பாக வைக்கப்படும். இப்படி 14 மேசைகளிலும் முடியும்போது ஒரு சுற்று முடிந்ததாக கணக்கிடப்படும். இதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 14 மேசைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும். வாக்குசாவடிக்கு ஏற்றாற் போல சுற்றுகளின் எண்ணிக்கையும் இருக்கும். குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்லவும் வாய்ப்பு உண்டு.

14 மேசைகள் போடப்படுவதால் பிற்பகலுக்குள் வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார் என்ற முன்னணி விபரம் தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

banner

Related Stories

Related Stories