தமிழ்நாடு

“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்?” - மருத்துவர் விளக்கம்!

விவேக் உயிரிழப்பு குறித்து, அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்?” - மருத்துவர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் விவேக் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக் உயிரிழப்பு குறித்து, அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் இணையதளம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள மருத்துவர், “நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது 24 மணி நேரம் கழித்துதான் விவேக்கின் உடல்நிலை குறித்து எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என கூறியிருந்தோம்.

ஆனால் எக்மோ செய்த 6 மணி நேரத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. மூச்சு இல்லை. மற்ற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டது. இதையடுத்து நேற்று காலை 4.40 மணிக்கு விவேக்கின் உயிர் பிரிந்தது.

நேற்று முன்தினம் காலை விவேக் தனது குடும்பத்தினரிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

பொதுவாக 3 நிமிடங்களில் வந்தால் இது போன்ற நோயாளிகளை பிழைக்க வைக்க வாய்ப்பு உண்டு. விவேக்கின் குடும்பத்தினர் அவரை 15 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மாரடைப்பின் போது மூளையில் இருக்கும் ரத்தக் குழாய்கள் ரத்த ஓட்டம் இல்லாமல் நின்றால் 3 முதல் 5 நிமிடங்கள் தாங்கும். இந்த 5 நிமிடங்களை தாண்டி செல்வோரின் நினைவை திரும்ப கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயமாகும்.

வரும்பொதே அவர் சுயநினைவிழந்த நிலையில்தான் வந்தார். அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. ரத்த அழுத்தத்தையும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று ஆக்ஸிஜன் கொடுத்து, கார்டியாக் மசாஜை 30 முறை செய்து அவரது இதயத்தை இயங்க வைக்க போராடினோம்.

இதன் பலனாக மூச்சை மீண்டும் கொண்டு வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதன் பின்னர் அவருக்கு ஆஞ்சியோ செய்தோம். அவருக்கு 100 சதவீதம் இதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தோம். இதையடுத்து அவரது இதயத்தை இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தி அடைப்பை சரி செய்தோம்.

தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிடி ஸ்கேன் எடுத்தோம். அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர் எக்மோ கருவியின் உதவி இல்லாமல் அவரது இதயத்தை இயங்க வைக்க ஐசியூவில் வைத்து சிகிச்சை அளித்தோம்.

அதைத்தொடர்ந்து, இரவு 12 மணி முதல் 2 மணி வரை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்தோம். பின்னர் அவருடைய குடும்பத்தினரை அழைத்து விவேக்கின் உடல்நிலை குறித்து விளக்கினோம்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு பிறகு அவருடைய இதயத் துடிப்பு குறைந்துகொண்டே வந்தது. ஒரு மணி நேரம் இதய துடிப்பு நின்று இருந்ததால் இதயம் பலவீனமடைந்திருந்தது. இதனால் அவரை காப்பாற்ற இயலாத சூழல் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. 100 சதவீதம் அடைப்பு என்பது ஒரே நாளில் ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருந்திருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories