மகாராஷ்டிரா மாநிலம், ரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள அம்பவடெகர் 1891 ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், இந்துமத வேத, உபநிடதங்கள், நடைமுறை வழக்காறுகளை கற்றுத் தேர்ந்தவர்.
உயர் கல்வி பெற்று, உலக நாடுகளின் அரசமைப்பு முறைகளையும், சட்ட விதிகளையும் கற்றுத் தேர்ந்தவர். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை வரைவு செய்து வழங்கியவர். சமூக உற்பத்தியின் உயிர்நாடியான உழைக்கும் மக்களை ‘சூத்திரர்கள்’ என்று ஒதுக்கி வைத்தும், ‘பஞ்சமர்’ என்று சமூக வட்டத்தில் இருந்து விலக்கி வைத்தும் இந்தப் பெரும் பகுதியினர் கற்பதற்கு தகுதியற்றோர் தடை செய்து வரும் அநீதி கண்டார்.
ஆறில் ஒரு பங்கு மக்களை தீண்டத்தகாதோர் என இழிவுபடுத்தி வருவதையும், வஞ்சகத்தால் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றிக் கொண்டவர்களை ‘உயர் குலத்தினர்’ கொண்டாடி வருவதையும் கண்டு கொதித்தெழுந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சமூக விடுதலைப் போராளியானார்.
தனது வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சட்டமேதை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அம்பேத்கர் வழிநின்று திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் பணியை சிறப்பாக பணியாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.