தமிழ்நாடு

"அரக்கோணம் இரட்டைக்கொலை வழக்கில் அரசியல் தொடர்பில்லை” - அவசர அவசரமாக அறிவித்த உண்மை கண்டறியும் குழு!

அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழுவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அரக்கோணம் இரட்டைக்கொலை வழக்கில் அரசியல் தொடர்பில்லை” - அவசர அவசரமாக அறிவித்த உண்மை கண்டறியும் குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பா.ம.கவிற்கு தொடர்பு இல்லை என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தல் தொடர்பான தகராறில் அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா ஆகிய இரு இளைஞர்களை அ.தி.மு.க, பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இரு இளைஞர்களையும் தாக்கிக் கொன்ற கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை 5 பேரை கைது செய்தது.

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான குழுவினர் சம்பவம் நடைபெற்ற கிராமங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தியுள்ளனர்.

அவர்கள் நடத்திய ஆய்வின் படி, அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டைக்கொலைக்கும் பா.ம.க-விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் சிவகாமி தலைமையிலான உண்மை அறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களும் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் என்பதும் தவறான தகவல் என்றும், கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாதவர்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் ஒருவர் கூட பா.ம.க-வை சார்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்களில் ஒருவர் மட்டும் அ.தி.மு.கவின் ஒன்றிய செயலாளர் மகன் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தேர்தல் பின்புலத்தில் நடைபெற்ற கொலை அல்ல எனவும் சாதிய மோதல் பல ஆண்டுகளாக அந்த இரு கிராமங்களிலும் நடைபெற்று வருவதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த இரட்டைக்கொலை நடைபெற்று இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அந்த கிராமங்களில் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதோடு, காவல் நிலையமும் அமைக்கப்பட வேண்டுமென அந்தக் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் குழுவினரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories