மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதிய வன்முறையின் கோர முகத்தைத் திரையில் காட்சிப்படுத்தியுள்ளது ‘கர்ணன்’.
‘கர்ணன்’ திரைப்படத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கொடியன்குளம் வன்முறைச் சம்பவம் 1995ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நிலையில், அச்சம்பவம் குறித்த காட்சிகளை 1997ன் முற்பகுதி எனக் குறிப்பிட்டு தி.மு.க ஆட்சிக்காலம் என்பதுபோல திரித்துக் காட்டப்பட்டுள்ளது.
சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் வரலாற்றைத் தவறாக திரிக்கலாமா விமர்சகர்களும், ரசிகர்களும் இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், படக்குழு இதுவரை இதுதொடர்பாக விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்தபிறகு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, இந்தச் சர்ச்சை குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
1995 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். ‘அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.