தமிழகத்தில் கொரோனா 2ம் கட்ட அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் 11 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 11 மணிக்கு மேல் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மோகன்ராஜ் என்பவரின் உணவகம் இரவு 10 மணிக்கு மூட தயார் படுத்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பெண்கள் சிலர் உணவு வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் கடையை பாதிமட்டும் திறந்து அவர்களை உள்ளே அனுமதித்து உணவு அளித்துள்ளார்.
மேலும் சிலரும் உணவு அருந்திக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கடை ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அங்கு உணவு சாப்பிட்டிக்கொண்டிருந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஓட்டலில் இருந்து கலைந்து சென்ற காவலர்கள் தொடர்ந்து 10 மணிக்கு மேல் கடைகளை திறக்கக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் கூறுகையில், “உணவகம், டீ கடைகள் உள்ளிட்டவை இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 10 மணிக்கு வந்து கடைகளை மூட சொல்லி காவல்துறை வற்புறுத்துவதால் எங்களின் வாழ்வாதரம் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதனிடையே இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவை ஓட்டலில் புகுந்து வாடிக்கையாளரை தாக்கிய விவகாரத்தில் உதவி ஆய்வாளர் முத்து, கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கோவை மாநகர போலிஸ் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு மனித உரிமை ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணை குறித்த அறிக்கையை 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.