சில்லறை வியாபாரம் செய்ய சுழற்சி முறையை ரத்து செய்து, மாலை 7 மணி முதல் காலை 7மணி வரை கடைகளுக்கு 100% அனுமதி வழங்க வேண்டும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அனுமதி வழங்கக் கோரி தலைமை செயலாளரை சந்தித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் துணை தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செயதியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்கள், கோயம்பேடு அங்காடியில், 150 மற்றும் 300 சதுர அடி கடை வியாபாரிகள், சுழற்சி முறையில் 50% கடைகளை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த கொரோனா தாக்கத்தின் போது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டபோது சி.எம்.டி.ஏ மற்றும் தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
மேலும், மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளதாக கூறிய அவர்கள், வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கோயம்பேடு அங்காடியில் 150 மற்றும் 300 சதுர அடி கடைகள் மொத்தம் 1,800 கடைகள் உள்ளதாகவும், 100% கடைகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.