விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கி பணங்களை வாரி வழங்கி வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கும் இந்திய வங்கிகள் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கடனை தர மறுப்பதோடு, கொடுத்த கடனையும் வட்டியும் முதலுமாக கறாராக வசூல் செய்கிறது என இந்திய மாணவர் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியைச் சார்ந்த மாணவி தாரணி தனது உயர் கல்விக்காக ரூபாய் 6,65,100 வரை வங்கியில் கல்விக் கடன் கேட்டு சமீபத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான சான்று மற்றும் காப்பு தொகையாக ரூபாய் 50,000க்கு மேல் தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துள்ளது. வங்கிக் கடன் கிடைக்காத நிலையில் மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வெள்ளியன்று (9.4.21) மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகார் மூலம் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு லெனின் என்ற மாணவன் வேலை கிடைக்காததால் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியவில்லை ஸ்டேட் பேங்க் நிர்வாகம் ரிலையன்ஸ் அடியாட்கள் மூலம் மிரட்டியதால் இதே மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கி பணங்களை வாரி வழங்கி வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கும் இந்திய வங்கிகள் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கடனை தர மறுப்பதோடு, கொடுத்த கடனையும் வட்டியும் முதலுமாக கறாராக வசூல் செய்கிறது.
இந்திய அரசின் வரி வருவாய் மற்றும் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணங்களும் சாதாரணமக்களின் வியர்வையில் சேர்ந்ததாகும். எந்த பெரும் முதலாளிகளும் முறையாக வரியோ, கடனோ செலுத்தியது கிடையாது. கல்விக் கடன் பெறும் சாதாரண வீட்டு குழந்தைகள் படித்து முடித்து நமது இந்திய பொருளாதாரத்தை வளர்க்கவே பாடுபடப்போகிறார்கள் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நடந்துகொள்ளும் அனைத்து வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாணவியின் தற்கொலைக்கு காரணமான வங்கி நிர்வாகத்தின் மீது மத்திய, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் நிபந்தனையின்றி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிட வேண்டும் என தமிழக மாணவர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.