தமிழ்நாடு

“அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தைக் கலைத்த பா.ஜ.க அரசு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !

தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அறிவுசார் சொத்துரிமை  தீர்ப்பாயத்தைக் கலைத்த பா.ஜ.க அரசு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"ஒருபுறம் உரவிலையை 58 விழுக்காடு உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றி, மறுபுறம் சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் துரோகத்தை, தமிழக மக்களும், விவசாயிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம் - 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாகச் செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அராஜகமாகக் கலைத்திருப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக் கூட மனமில்லாத - மார்க்கம் தெரியாத - மனிதாபிமானமற்ற மத்திய பா.ஜ.க. அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து - இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக - தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பழிவாங்குவது நியாயமல்ல!

“அறிவுசார் சொத்துரிமை  தீர்ப்பாயத்தைக் கலைத்த பா.ஜ.க அரசு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !

உரவிலையைக் கண்டித்து நாடுமுழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதன் பிறகு “உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது” என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பா.ஜ.க. அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு! ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டு - பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு! இப்போது உர விலையை உயர்த்தி விட்டு – “இப்போது அமல்படுத்தமாட்டோம்” என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை- புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால், இந்த பா.ஜ.க அரசுக்கு இருக்கின்ற நிறுவனங்களைக் கலைப்பதோ, தனியாருக்கு விற்பதோ மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாக இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் தீவிர முயற்சியின் விளைவாக 2003-ல் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது.

“அறிவுசார் சொத்துரிமை  தீர்ப்பாயத்தைக் கலைத்த பா.ஜ.க அரசு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !

இங்கு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தீர்ப்பாயம் - காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது. ஆனால் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் - தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் இந்தத் தீர்ப்பாயத்தைக் கலைத்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. இத்தீர்ப்பாயம் மட்டுமல்ல - இன்னும் பிற ஏழு தீர்ப்பாயங்களையும் கலைத்து மூர்க்கத்தனமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

உயர்நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்க - மக்களுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பா.ஜ.க. அரசு கலைத்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக - சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்தது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.

ஒருபுறம் உரவிலையை உயர்த்தி விவசாயிகளுக்கும், இன்னொரு புறம் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்து, தமிழகத்திற்கும் மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories