அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆசிரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாய படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதை தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அரியர் தேர்வு எழுத கட்டணம் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.