தமிழ்நாடு

“ஆள அருகதையற்றவர்களை அகற்றுவதே அறம்” : தமிழக வாக்காளப் பெரு மக்களுக்கு ‘தீக்கதிர்’ தலையங்கம் வேண்டுகோள்!

பா.ஜ.கவையும், அ.தி.மு.கவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நிராகரிப்பதே தமிழக வாக்காளப் பெரு மக்களின் வரலாற்றுக் கடமையாகும்.

“ஆள அருகதையற்றவர்களை அகற்றுவதே அறம்” : தமிழக வாக்காளப் பெரு மக்களுக்கு 
‘தீக்கதிர்’ தலையங்கம் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிபொறுப்பேற்றது முதல் நாட்டிற்கு ஏழரை நாட்டுசனி பிடித்தது போன்ற நிகழ்வுகளே நடந்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் மோடி அரசின் செயல்பாடுகள் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் கொடூரமே நடந்தது. ஆனால் அவரது நண்பர்களான அதானியும் அம்பானியும் வளர்ச்சிமேல் வளர்ச்சி பெற்று உலக பணக்காரர்களோடு போட்டியிடும் அளவிற்கு உயர்ந்துள்ளனர்.

நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்தை ஒழித்துக் கட்டுவதற்காகவே நான்கு சட்டங்களையும் மின்சார சட்டத்தையும் கொண்டு வந்தனர்.தொழிலாளர்களின் சிறப்பு உரிமைகளையெல்லாம் காலி செய்யும் விதமாக நான்கு புதிய சட்டங்களை கொண்டு வந்து முதலாளிகளுக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய முதலாளிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்தார்கள்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு, கொரோனா கால ஊரடங்கு போன்ற திடீர் நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் துடித்தார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம், 370சட்டப்பிரிவு நீக்கம் போன்றவற்றை கொண்டு வந்து நாட்டு மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தினார்கள். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் எண்ணத்தின்படி ஏழை எளியவர்களுக்கு கல்வி பெறும் உரிமையை பறித்தார்கள். இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணித்தார்கள். பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயுவிலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தினார்கள்.

“ஆள அருகதையற்றவர்களை அகற்றுவதே அறம்” : தமிழக வாக்காளப் பெரு மக்களுக்கு 
‘தீக்கதிர்’ தலையங்கம் வேண்டுகோள்!

இப்படி மத்திய அரசாங்கம் கொண்டு வந்தமக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களுக்கெல்லாம் இருகைகளையும் உயர்த்தி ஆதரவளித்து தமிழகத்திற்கு துரோகம் செய்தனர் அதிமுக ஆட்சியாளர்கள்.நீட் தேர்வுக்கு விலக்கு பெறமுடியாமல் 16 இளந்தளிர்களை காவு கொண்டுவிட்டு ஜல்லிக்கட்டை பாதுகாத்தோம் என்று பசுப்புகிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். தங்கள் வாழ்வுரிமைக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தூத்துக்குடியில் 13 பேரை பலி கொண்டார்கள். பொள்ளாச்சியில் இளம் பெண்களை சீரழித்தவர்களை நடமாடவிட்டு விட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை பற்றியும், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிர் பறித்ததையும் மறந்து விடுகிறார்கள்.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி வரவுகளை வாதாடிப் போராடி பெறுவதற்கு வக்கில்லாமல் தங்களது பதவியை பாதுகாத்துக் கொள்வதையே கடமையாகக் கருதினார்கள்; தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்தார்கள். தமிழகத்தின் பெருமைக்குரிய நல்லிணக்கத்தையும் பாரம்பரியத்தையும் சிதைப்பதற்கு செயல்படுகிற பா.ஜ.கவை தூக்கிச் சுமக்கிற அ.தி.மு.கவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நிராகரிப்பதே தமிழக வாக்காளப் பெரு மக்களின் வரலாற்றுக் கடமையாகும்.

- தீக்கதிர் தலையங்கம்

banner

Related Stories

Related Stories