சென்னை மாநகராட்சியில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் கூறுகையில், “அமைச்சர் வேலுமணி, அவருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் கூட்டு சதி செய்து சென்னை மாநகராட்சியில் டெண்டர் கொடுத்துள்ளார். மேலும் சில ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதி செய்து டெண்டர் எடுத்து இருக்கின்றனர்.
கடந்த 2018ல் மழைநீர் வடிகால், சாலை போடுவதற்காக டெண்டர் போடப்பட்டது. இந்த டெண்டரில் பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குருமூர்த்தி மற்றும் ஜிஜி நிறுவனங்கள் போட்டி போடுகிறது. இதில் ஜி.ஜி.நிறுவனத்தின் சொந்தகாரர் குருமூர்த்தியின் மனைவிதான். கணவன், மனைவி இருவரும் டெண்டரில் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான டெண்டர்களை இவர்கள் இருவரும் எடுத்துள்ளனர். ரூ.2,704 கோடி டெண்டரில் பங்கேற்றுள்ளனர். ஒரே ஐ.பி அட்ரஸில் இருந்து டெண்டருக்கு விண்ணப்பிக்கின்றனர். இது, சென்னை மாநகர ஆணையருக்குத் தெரியாமல் இருக்காது.
அடுத்ததாக ஆர்.டி.ஐ பவுண்டேஷன் மற்றும் தாமஸ் அய்யாத்துரை நிறுவனம். இவர்கள் இருவரும் அண்ணன், தம்பிகள். அவர்களுக்குள்ளேயே டெண்டர் எடுப்பார்கள். இப்படி அண்ணன், தம்பி சேர்ந்து டெண்டர் போடுவது, மாமன், மச்சான் சேர்ந்து டெண்டர் போடுவது, கணவன், மனைவி சேர்ந்து டெண்டர் போடுவது தான் சென்னை மாநகராட்சியில் நடந்துள்ளது. இதில், பல கட்டங்களில் பெரும் பணம் விளையாடி உள்ளது. மேலும் ஊழல்களும் நடந்திருக்கின்றன. தார்ச் சாலை போடுவதில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்து கொடுத்தனர்.
ஆற்றுமணல் தட்டுப்பாடு காரணமாக எம்.சாண்ட் போடலாம் என்று நிபந்தனை கொண்டு வந்தனர். ஆனால், டெண்டர் ஆவணங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்பட்டது என போட்டுள்ளது. அதற்கான பணமும் ஆற்றுமணலுக்குத் தான் போடப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமான பணிகளுக்கு எம்.சாண்ட் தான் பயன்படுத்தியுள்ளனர். எம்.சாண்ட் ஒரு க்யூபிக் மீட்டருக்கு ரூ.50, ஆற்றுமணல் ஒரு க்யூபிக் மீட்டர் ரூ.120. இந்த மாதிரி நூற்றுக்கணக்கான கோடி ஊழல் நடந்துள்ளது.
இதுபோன்ற எந்த ஊழல் குற்றச்சாட்டு மீதும் நடவடிக்கை எடுக்காத பிரகாஷ் நேர்மையானவர் என்று யார் சொல்வார்கள்? இதனால், தான் அமைச்சர் அவருக்கு அவர் அப்பழுக்கற்ற அதிகாரி என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.