தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி நாள் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியில், செய்திப்பிரிவுத் தலைவர் ப.திருமாவேலன் அவர்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
பகுதி - 02
கேள்வி : கலைஞர் அவர்களின் இலக்கியம், பேச்சு, எழுத்து ஆகியவை தாண்டி இந்த தமிழ்நாட்டுக்கு செய்த மாபெரும் தொண்டு என்று எதைச் சொல்வீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின் : இந்த நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கலைஞர் அவர்கள் தான். நாம் இன்று பார்க்கும் தமிழகம் என்பது அவர் உருவாக்கிய தமிழகம் தான். அதைச் சொன்னால் பல மணி நேரம் ஆகும். ஒவ்வொரு துறைக்கும் செய்த ஒரே ஒரு மாபெரும் விஷயத்தை பற்றி மட்டும் சொல்கிறேன்!
* தமிழுக்கு செம்மொழி உரிமை!
* தமிழாசான் வள்ளுவருக்கு கோட்டமும் சிலையும்!
* அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி!
* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!
* விவசாயத் தொழிலாளர்களுக்கு 7000 கோடி கடன் ரத்து!
* நெசவாளர்க்கு சென்வாட் வரி ரத்து!
* காவிரிக்கு நடுவர் மன்றமும், இறுதித்தீர்ப்பும்!
* சிறுபான்மையினருக்கு நல இயக்ககம்!
* அனைவருக்குமான சமூகநீதி!
* பெண்களுக்கு சொத்துரிமையும், 33 சதவிகித இடஒதுக்கீடும்!
* தொழில்கள் தொடங்க சிப்காட்!
* மாவட்டம் தோறும் தொழில் பேட்டைகள்!
* மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்!
* கிராமங்களுக்குள் மினி பஸ்!
* வீடுவாங்க வீட்டுவசதி வாரியம்!
* மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்றாம் பாலினத்தவர்க்கும் சலுகைகள்!
* மருத்துவக் காப்பீடு திட்டம்!
* நீர்மேலாண்மைக்கு 42 புதிய அணைகள்!
* டைட்டல் பார்க்!
* கோவில் சொத்துக்கள் மீட்பும், கோவில்கள் பராமரிப்பும்!
* தேசபக்தர்கள், எல்லை வீரர்கள், மொழிப்போராட்டத் தியாகிகள் மணிமண்டபங்கள்! - இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் நீங்கள் பார்ப்பது, உங்கள் கண்ணில் படுவது அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை. அதனால் தான் நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என்று கலைஞரை நான் குறிப்பிட்டேன்!
கேள்வி : கலைஞர் விட்ட இடத்தில் இருந்து தொடங்கப் போகிறீர்களா?
தலைவர் மு.க.ஸ்டாலின் : ஆமாம்! கலைஞர் போட்ட பாதையில் பயணிக்க இருக்கிறேன். இன்னும் கூடுதலான தொழில் நுட்ப வசதிகள் வந்துவிட்டது. எனவே மைக்ரோ அளவில் அனைத்துப் பிரச்னைகளையும் பார்த்து சரி செய்வது என்னுடைய திட்டமாக இருக்கும்!
கல்வி - வேலைவாய்ப்பு- சுகாதாரம் - நகரங்கள் - கிராமங்கள் - பெண்கள் - என அனைவருக்குமான பிரச்னைகளை நான் திருச்சி மாநாட்டில் மார்ச் 7 அன்று அறிவித்திருக்கிறேன். அது தான் என்னுடைய பத்தாண்டு கால வேலைத் திட்டமாக இருக்கப் போகிறது.
கேள்வி : இந்த அறிவிப்புக்கு பிறகு பலரும் வைக்கும் விமர்சனம், இதற்கான நிதி எங்கே இருக்கிறது என்று தானே கேட்கிறார்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின் : நிதியைக் கையாளும் இடத்துக்கு ஒருவர் வந்து உட்கார்ந்த பிறகு அதைக் கேளுங்கள். எனது ஏழு வாக்குறுதிகளில் முதலாவது உறுதி மொழியை உன்னிப்பாக கவனியுங்கள். பொருளாதார மேம்பாடு குறித்தது தான் முதல் வாக்குறுதி. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டினாலே மற்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடலாம்!
எனது வாக்குறுதிகளில் அரசுக்கு செலவு வைக்கும் வாக்குறுதிகள் மட்டும் இல்லை. அதிகமான அளவு அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் வாக்குறுதிகளும் இருக்கிறது!” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.