தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் நேற்றோடு முடிந்தது. இந்நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில், பணப்பட்டுவாடாவில் ஈடுப்பட்ட அதிமுகவினர் பலரையும் போலிஸார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பல இடங்களில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வாக்குச்சேகரிக்கவிடாமல் தடுத்து அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், நேற்றைய தினம் கோவை வடக்கு தொகுதியில் தி.மு.க பிரச்சாரத்தின் போது அ.தி.மு.கவினர் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில், தி.மு.கவைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில், தி.மு.க வேட்பாளர் வம.சண்முகசுந்தரம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சாரமேடு பகுதிக்கு வந்தார்.
அவரைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எஸ்.பி.வேலுமணியை உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறி, வெளியேறும்படி முழக்கங்களை எழுப்பினர். இதனால், அதிர்ச்சி அடைந்த எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த வேலுமணியின் ஆதரவாளர்கள் தி.மு.கவினரின் பிரச்சார கூட்டத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனிடையே அ.தி.மு.கவினர் கூடியிருந்தவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த தி.மு.க தொண்டர் அணி அமைப்பாளர் நௌசாத், வார்டு பொறுப்பாளர் பஷீர். சாகிரா பேகம், பாரிஜான் ஆகியோர் காயமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து சிறிது நேரத்திலே தொண்டாமுத்தூர் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் நா.கார்த்திக் ஆகியோர் அ.தி.மு.கவினரால் தாக்கப்பட்ட தி.மு.க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.