ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை கண்டவுடன், இவர்களது பத்தாண்டு ஆட்சியில் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுந்தது.
தற்போதைய தொழில்நுட்பப் பூங்காக்களின் நிலை என்ன?
தமிழகத்தில் தற்போது 8 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் எல்காட் என்ற அரசு நிறுவனத்தால் சிறப்பு பொருளாதார மண்டலமாக நிர்வகிக்கப்படுகின்றது.
இந்திய ஒன்றிய அரசு இந்த 8 சிறப்பு பொருளாதார மண்டல தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் ஒப்புதல் வழங்கியது. பதினான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் சில பூங்காக்கள் செயல்படத் துவங்கவில்லை; சில பூங்காக்கள் முழுமையாக செயல்படவில்லை.
இந்த தொழில்நுட்பப் பூங்காக்கள் ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் கொண்டவையும், சில ஆயிரம் வேலைவாய்ப்பை கொண்டவையுமாக பெரியதும் சிறியதுமான அளவுகளில் உள்ளன. இவர்களின் அரைகுறை செயல்பாட்டால் ஒட்டுமொத்தமாக சுமார் 94,000 வேலை வாய்ப்புகள் மட்டுமே கடந்த பதினான்கு வருடங்களில் உருவாக்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக சென்னையில் இருக்கும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் மட்டும் 68,000 வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்பப் பூங்காக்கள் சராசரி வெறும் 3,200 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன.
தமிழக அரசின் துறை சார்ந்த ஆண்டு அறிக்கை படி தகவல் தொழில்நுட்பத் துறையில் 7.4 லட்ச ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஒட்டுமொத்த தமிழக வேலைவாய்ப்பில் எல்காட் நிர்வகிக்கும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களின் மூலம் 12% வேலை வாய்ப்புகளே உருவாகிறது. இருப்பதையே உருப்படி ஆக்காதவர்கள், புதிதாய் என்ன செய்து விடப்போகிறார்கள்?
இடம்பெயரும் பட்டதாரிகள்
படித்த பட்டதாரிகள் தங்களின் மாவட்டங்களில் திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகள் இல்லாததால் நகரங்களை நோக்கி தன் குடும்பத்தை, நண்பர்களை பிரிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவ்வாறு ஏற்படும் நிர்ப்பந்தத்தால் வேலைதேடி நகரத்திற்கோ, பிற மாநிலத்திற்கோ, பிறநாட்டிற்கோ இடம்பெயரும் பட்டதாரிகள் சரியான இருப்பிடமும் உணவும் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
அவர்களின் இக்கட்டான நிலையையும் வேலையின்மையையும் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி தருவதாக, போலி அனுபவ சான்றிதழ் பெற்றுத் தருவதாக - என பல்வேறு விதமான ஏமாற்றுதலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறான இன்னல்கள் அனைத்திற்கும் பட்டதாரிகளுக்கு தங்களின் சொந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதுதான் தீர்வாக இருக்கும்; ஆனால் அதை அ.தி.மு.க அரசு இனி எப்படி செய்யும்?
50 லட்சம் மடிக்கணினிகள் எதற்காக?
தமிழக அரசின் துறை சார்ந்த ஆண்டு அறிக்கை படி 2011 ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 56 லட்சத்திற்கும் மேல் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் கொள்கையால் தகவல் தொழில்நுட்பம் எல்லா தொழில்களின் அடிப்படை அங்கமாகியுள்ளது. தொழில்களின் மாற்றம் வேலைகளை உருமாற்றுகின்றது.
இவ்வாறு உருமாறும் வேலைகளின் தேவைக்கு திட்டமிடப்பட்டதுதான் தமிழக மாணவர்களை தொழில்நுட்பத் திறனுடன் கூடிய பட்டதாரி பட்டாளத்தை உருவாக்கும் தமிழக அரசின் 2023 தொலைநோக்கு திட்டம். இத்திட்டத்தின் நோக்கமே முதலாளித்துவ தேவைக்கு பெருமளவு பட்டதாரி பட்டாளத்தை தயார்படுத்தி வைப்பதுதான்.
கடந்த 10 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் மாணவர்கள் மடிக்கணினி பெற்றுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 35 லட்சம் மாணவர்கள் வேலைக்கு தேவையான கல்வித் தகுதியுடனும் அடிப்படை கணினித் திறனுடனும் தயாராக உள்ளனர். ஆனால் வேலை வாய்ப்போ இந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட பட்டதாரிகளை பணியில் அமர்த்தும் அளவிற்கு வளராமல் உள்ளது.
தமிழக அரசின் துறை சார்ந்த ஆண்டு அறிக்கையின் படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் 7.4 லட்சம் ஊழியர்களே பணியாற்றுகின்றனர். உலக சந்தைக்கு தேவையான தொழில்நுட்பத் திறன் கொண்ட மாணவர்கள் லட்சக்கணக்கில் தயார் நிலையில் இருந்தும் அவர்களின் திறமைக்கும் படிப்பிற்கும் ஏற்ப வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க, கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசினால் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
நன்றி - தீக்கதிர்