தமிழகத்தில் வருகிற 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் ஆதரவு மற்றும் கருத்துக் கணிப்பு வரை அனைத்துமே தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் முதல் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கோவை வந்தபோது, கலவரத்தில் பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிக்க உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கோவை வந்திருந்தார். அவர் வருகையையொட்டி நகரின் பல முக்கிய பகுதிகளை பா.ஜ.கவினர் முடக்கினயுள்ளன.
மேலும், பா.ஜ.க இருசக்கர வாகன பேரணியின் போது டவுன்ஹால் பகுதியில் செல்லும் போது அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்கச் சொல்லி பா.ஜ.கவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த மசூதிக்கு அருகில் நின்று வெறுக்கத்தக்க வகையில் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதனிடையே அங்கிருந்த காலனி கடையின் மீது பா.ஜ.கவினர் கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்டு, கலவரத்தை ஏற்படுத்திய பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.