தமிழகத்தில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் உள்ள 12,585 கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் 20.30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் பால் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நாளொன்றுக்கு 33.23 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்துறையின் அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அது மொத்தமாக கெட்டு விடும் என்பார்கள்.
ஆனால் இந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகளால், மொத்தமாகவே இந்த துறையையே திவால் ஆக்கிவிடும் நிலைக்கு ஆளுங்கட்சியினர் மாறியுள்ளதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். பால் கொழுப்பை குறைத்து கொழுக்கும் அதிகாரிகள் பால் கொள்முதல் செய்யும் ஆரம்ப நிலையான, கூட்டுறவு சங்கங்களிலேயே அதன் தரத்தை சோதனை செய்து, அதன் விலையை உற்பத்தியாளரிடம் சொல்ல வேண்டும். ஆனால், கொள்முதல் செய்யும் பால், ஆவினுக்கு வந்த பின்னரே சோதனை செய்கின்றனர்.
ஆவின் அதிகாரிகளும், சொசைட்டி தலைவரும் கைகோத்துக்கொண்டு பாலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கிறது என எழுதிக்கொண்டு, விலையை குறைத்துவிடுகின்றனர். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் விவசாயிகளின் பாலை கொள்முதல் செய்யமாட்டார்கள். ஆனால் ஆவினுக்குள் வரும்போது கொழுப்பை அதிகரித்துக் காட்டி ஆண்டுக்கு பல கோடிகளை சுருட்டுகின்றனர். இது கூட்டுறவு சங்கத் தலைவர் முதல் அமைச்சர் வரை செல்கிறது.
லாரி பாலில் கிணற்று தண்ணீர் கலப்பு
திருவண்ணாமலை ஓலைப்பாடி, கீரனூர், நச்சானஞ்சல், ராதாபுரம், மங்களம் ஆகிய கிராமங்களில் இருந்து லாரியில் பால் ஏற்றி வரும் ஊழியர்கள் வழியில் பாலை விற்பனை செய்துவிட்டு, அளவை சரி செய்ய அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பாலில் கலந்து ஆவினுக்கு சப்ளை செய்தனர். இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சேகர், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஷாம் ஆகிய 3 அலுவலர்கள், பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த 6 பேர், தண்ணீர் கலந்த பாலினை வாங்கிய தனியார் பால் வியாபாரிகள் 2 பேர் என்று மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 வேன்கள், ஒரு கார் ஆகியன சிக்கின.
பால் தான் வெள்ளை; மேலாளர் மனசு கருப்பு
வேலூர் ஆவின் பொதுமேலாளராக இருந்து, திருநெல்வேலிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட கணேசன், வேலூர் ஆவினில் பால்கொள்முதல் செய்து கொடுத்த முகவர் முருகய்யாவுக்கு அதற்கான ஒப்பந்த தொகை ரூபாய் 1.90 லட்சம் வழங்க ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக பொதுமேலாளர் கணேசன், பால் உற்பத்தி பொதுமேலாளர் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தரமில்லாத தரக்கட்டுபாட்டு அதிகாரிகள்
ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்தான் ஊழலின் துவக்கப் புள்ளி. இவர்களிடம் இருந்துதான் ஆவின் நிறுவனத்தின் ஆவின் ஊழல் தொடங்குகிறது. அதாவது, தரமற்ற பாலினை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த பாலை திருட்டுத்தனமாக விற்பனை செய்துவிட்டு, அதற்கு ஈடாக தண்ணீர், சோயா பவுடர், ஜவ்வரிசி, குளுக்கோஸ் போன்றவற்றை கலப்படம் செய்து ஈடுகட்டுவது போன்றவற்றிற்கு இவர்கள் துணை போகின்றனர்.
இதன் மூலம் மாமூல் ‘டாப் டூ பாட்டம்’ வரை கோடிக்கணக்கில் செல்கிறது. தரம் குறைந்த ஃபிலிம் வாங்குவதாலும், குளிர்சாதனக் கிடங்குகள் இல்லாமல் பால் கெட்டுபோய்க்கொண்டிருக்கிறது. இந்த சீர்கேடான நிர்வாகத்தின் ஆண்டுக்கு பல லட்சம் லிட்டர் பால் கெட்டுப்போய், கழிவு நீர் கால்வாய்களில் கொட்டப்படுகிறது. இதற்கு முழுமுதற் காரணம் ஆவின் நிர்வாகம் தான்.
சேலத்தில் கொடிகட்டி பறக்கும் லஞ்சம்
சேலம் ஆவினில் முக்கிய பொறுப்புக்கு வரும் அதிகாரிகள், ஆவினை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, முகவர்களுக்கான ஒப்பந்த நிபந்தனைகளில், புதுப்புது மாற்றங்களைச் செய்து, பல ஆண்டுகளாக லைசென்ஸ் பெற்று இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் முகவர்களை புறக்கணிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், விநியோகஸ்தர்கள் என்ற பெயரில், இடைத்தரகர்களை நியமித்து ஆவினில் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், ஆவின் முழுவதுமாக தனியாருக்கு தாரை வார்க்கப்படுமோ என்ற அச்சமும் முகவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆவினுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பழைய லாரிகளை மாற்றிவிட்டு, புதிதாக லாரிகளுக்கு அனுமதி வழங்க ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை முறைகேடாக வசூலித்துள்ளனர். மேலும், விளம்பரத்திற்காக வழங்கப்பட வேண்டிய ஆவின் பனியனுக்கு கூட, வசூல்வேட்டை நடத்தியுள்ளனர்.
கமிஷன் தந்தால் ஆவின் பாலகம்
பால்வளத்துறை தலைவராகவும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் நிழலாகவும் வலம்வரக்கூடியவர் தஞ்சை ஆவின் தலைவராக உள்ளார். இவர் பால்வளத்தலைவராக பொறுப்பேற்ற பின் தஞ்சை ஆவின் நிர்வாகம் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மாநகரம் முழுவதும் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அமைச்சரின் ஆசிபெற்றவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாலகம் வைக்க அணுகினால், லஞ்சம் கொடுத்தால் தான் தருகின்றனர்.
டீக்கடைகளாக மாறிய ஆவின் பாலகங்கள்
தமிழகம் முழுவதும் பால், பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் ஆவின் பாலகங்கள் அமைக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மானியமாக இதற்கு ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது. சொந்த கட்டிடம் இருக்கவேண்டும் என்பது விதிமுறை ஆகும். ஆனால் அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் ஆளும் கட்சியினருக்காக ஆவின் பாலகங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக ஆவின் பொறுப்புகளில் இருப்பவர்கள் கைகளுக்கு லட்சக்கணக்கில் கைமாறினால் உடனே அனுமதி வழங்கப்படுகிறது. ஆவின் பாலகங்களை பொறுத்தவரையில் ஆவின் நிறுவன தயாரிப்புகளை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. ஆனால், டீ உள்ளிட்டவை விற்பனை செய்யும் டீக்கடைகளாகவும், கூல் பார்களாகவும் மாறிவிடுகின்றன.
மாமூல் வசூலிக்க புது தந்திரம்
சென்னையில் 60 மொத்த பால் விற்பனை முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 75 காசு முகவர் கழிவாக ஆவின் நிறுவனம் தருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தில் சி என்ட் எப் என்ற பெயரில் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு வழங்கப்படும் கழிவுத் தொகையுடன் மேலும் கூடுதலாக 75 காசு சேர்த்து ரூ.1.50 என கழிவுத் தொகை வழங்கப்பட்டன. அந்த வகையில் அரசுக்கு இரண்டு மடங்கு செலவாகிறது.
10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்த ஆவின் பால் விலை
2011ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, ஒரு லிட்டர் ரூ.17 இருந்த ஆவின் பால் இப்போது ரூ.42. 2011ம் ஆண்டு லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. இப்படி படிப்படியாக கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 84 சதவிகிதம் அளவுக்கு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பால் விலையேற்றத்தால் ஆவினின் பால் உபபொருட்களான வெண்ணெய், நெய் ஆகியவற்றோடு காபி, டீ உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்தன. இதனால் சராசரிக் குடும்பத்தின் மாதந்திர பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 கூடுதல் சுமையானது.
லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிமுறையை மீறி ஊழியர்கள் நியமனம்:
ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மாதவரத்தில் உள்ள பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிக்க, 5 கோடிக்கும் மேல் பணம் வாங்கிக் கொண்டு போஸ்டிங் கொடுத்தனர். சில பதவிகளின் கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருக்க வேண்டும். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு, பிஇ, எம்.காம் படித்தவர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பெற்றுக் கொண்டு டிகிரி படித்தவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் பணிநியமன ஆணையை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடைநிலை பணியான இதில் உள்ளூர் ஆட்களை நியமிக்காமல் வேலூர் முதல் நாகர்கோவில் வரை உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து சேர்ந்துள்ளனர். இந்தத் துறையில் பணியாற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பால் உற்பத்தி எவ்வளவு?
தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஆவின் நிறுவப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த பால் உற்பத்தியில் (51%சதவீதம்) 105 லட்சம் லிட்டர், அமைப்பு சாரா பிரிவுகள் மூலமாகவும், 76 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில் கூட்டுறவுகளின் பங்களிப்பு 38 லட்சம் லிட்டர் ஆகும்.
சரிவுக்கு காரணமான காமராஜ்
ஆவின் நிர்வாக இயக்குநராக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இருந்த சுனில் பாலிவால் அவரது பணிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் (2016-2017) சுமார் ரூ.5,281 கோடி ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டியதில், சுமார் ரூ.139.34 கோடி நிகர லாபத்தில் ஆவின் நிறுவனத்தைச் செயல்பட வைத்து வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்க வைத்தார். ஆனால், ஆவின் நிர்வாக இயக்குநராக சி.காமராஜ் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதாவது 2017-2018ல் சுமார் ரூ.27.96 கோடி. 2018-2019ம் நிதியாண்டில் சுமார் ரூ.13.36 கோடி வரை ஆவின் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. தொடர்ந்து ஆவின் நிறுவனம் 2019-2020, 2020-2021 ஆகிய காலக்கட்டங்களிலும் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு ஆவின் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் செலவினங்கள் அதிகரித்து, முறைகேடுகள் காரணமாக ஆவின் நிறுவனம் இழப்பை சந்தித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இல்லாத காலாவதி பாலில் கல்லா
பால் வாங்கும்போது விவசாயிகளிடம் பாலின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி குறைந்த விலைக்கு கொடுத்து விடுகின்றனர். இதேபோல் ஒரு நாளைக்கு கொள்முதல் செய்த பாலை அப்படியே ஆவின் நிறுவனத்துக்கு வழங்காமல் தனியாரிடம் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். கணக்கு வழக்கில் தவறு கண்டுபிடித்தால் காலவதியான பால் கணக்கில் காட்டி அதனை சரிசெய்து விடுகின்றனர் என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சென்னையில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிக்கும் தொடர்பு என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
நன்றி: தினகரன்