தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை முடிய இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் அ.தி.மு.கவினர் தேர்தல் அரசு அதிகாரிகளின் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறினால், அவர்கள் கண்துடைப்புக்காக புகார் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.
மேலும், தோல்வி பயத்தில் இருக்கும் அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் தி.மு.க வேட்பாளர்கள் பெயரிலேயே, அதே தொகுதியில் சில சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தி வாக்குப்பதிவின்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் கயல்விழி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க வேட்பாளர் கயல்விழி எளிதில் வெற்றி பெறுவார் என தொகுதி மக்கள் பேசி வருகின்றனர். இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் எல்.முருகன், கயல்விழி என்ற பெயரிலேயே இரண்டு சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.
மேலும், ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தைப்போலவே தோற்றம் அளிக்கும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டால், அது பேனா சின்னம் என கூறுகிறது. இப்படி பல தொகுதிகளில் புகார் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுக்காமல், தேர்தல் ஆணையம் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாகவே நடந்துவருகிறது.