தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு பண விநியோகத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், "தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள், சில ஆய்வுகள் தி.மு.க தலைமையிலான அணி வெற்றிபெறும் எனத் தெரிவிக்கின்றன. இது சட்டப்பேரவைத் தேர்தலில் பளிச்சென தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட, சட்டப்பேரவை தேர்தலில் அதிகமான இடங்களில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.
அ.தி.மு.க, பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் துணையோடு வாக்காளர்களுக்குப் பண விநியோகத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல் வெளிவருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து, பண விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் பிடிக்க வேண்டும்.
அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவோம் எனக்கூறி சிலிண்டர் படங்களுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த இவர்கள் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2 சிலிண்டர்களையாவது இலவசமாக வழங்கியிருக்கலாம். சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருக்கலாம். இதைச் செய்யாமல் 6 சிலிண்டர்கள் இலவசம் என்று கூறி ஒரு ஏமாற்று வேலையை தற்போது செய்து வருகிறார்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.