நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு. குறிப்பாக அம்பானி மற்றும் அதானி போன்ற மோடிக்கு நெருக்கமானவர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே திண்ணமாக கொண்டுள்ளது பா.ஜ.க அரசு.
ரயில்வே, விமானம், எண்ணெய் நிறுவனங்கள் என பலவற்றை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி விமான நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அகமதாபாத், மங்களூர், லக்னோ, கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக திருச்சி, புவனேஷ்வர், அமிர்தசரஸ், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய ஆறு விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தை ஏலத்தில் எடுக்கும் அதே நிறுவனம், சேலம் விமான நிலையத்தையும் நிர்வகிக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
சேலம் விமான நிலையத்தைப் போல், ஜர்ஸுகுடா, குஷினகர், வாரணாசி, அமிர்தசரஸ், ராய்ப்பூர், இந்தூர் ஆகிய விமான நிலையங்களையும் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 13 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் முடிவில் இறங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.