காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொஞ்சு அடைக்கண். இவரது மனைவி பழனியம்மாள். இந்நிலையில் கொஞ்சு அடைக்கண் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 19ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வரை சித்ரா என்ற முன்னாள் காதலி போன் செய்து படப்பை அருகில் வரவழைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கூலிப்படையினர் அவரது கழுத்தை இறுக்கி காரிலேயே கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூன்று நாட்கள் ஒரு வீட்டிலேயே சடலத்தை வைத்துள்ளனர்.
பின்னர் தார் ட்ரம் ஒன்றை வாங்கி வந்து சிமெண்ட் கலவை தயாரித்து அடிப்பகுதியில் கலவை போட்டுவிட்டு, அதன்பின் அவரது உடலை வைத்துவிட்டு மீதி உள்ள மொத்த சிமெண்டையும் நிரப்பிவிட்டு, 3 நாட்கள் அதை காயவிட்டு, பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே தனது கணவரை காணவில்லை என காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி பழனியம்மாள் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவலாய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலதாமதமாகி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று ஆரம்பித்ததால் புகார் கிடப்பில் போடப்படுகிறது.
அதன் பின், காஞ்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம் பழனியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் அளித்து எவ்வித பயனும் இல்லாததால் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், முதல் முறையாக போட்ட மனு அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை, குடும்ப பிரச்னை இது என்று கூறி வழக்கை முடித்து வைக்கிறார்கள்.
இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு மீண்டும் ஆட்கொணர்வு மனு அளித்தப்போது, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதியன்று, டிஸ்.பி தலைமையில் ஒரு குழு அமைத்து அவரை தேடுகிறோம் என கூறிவிட்டு மீண்டும் காலதாமதப்படுத்துகிறது காவல் துறை. இதனையடுத்து கடந்த மாதம் பிப்ரவரி 19 தேதி கொஞ்சு அடைக்கண் வங்கி கணக்கில் இருந்து சுமார் 3 லட்சத்து 50, 000 ரூபாய் காசோலை சித்ராவின் வழக்கறிஞர் பரிசுத்தனாதன் என்பவரின் வங்கி கணக்கிற்கு பணம் சென்றுள்ளது.
பணம் கொஞ்சு அடைக்கண் கணக்கிலிருந்து டெபிட் செய்யபட்ட செய்தி அவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி வருவதை அறிந்த பழனியம்மாள் இந்த தகவலையும் மீண்டும் சென்று காவல்நிலையத்தில் புகார் கூறுகிறார்கள். ஆனாலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் காவல் துறை எடுக்கவில்லை. அலட்சியப்படுத்தும் காவல் துறையின் செயலை நினைத்து இவ்வளவு தகவல் அளித்தும் காவல் துறை அலட்சியமாக உள்ளதே என மனமுடைந்துள்ளார் மனைவி பழனியம்மாள்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி, தனது இறுதி முயற்சியாக தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறை ஐ.ஜி.சங்கர் அவர்களை சந்தித்து புகார் அளித்த நிலையில் ஒரு வாரத்திற்குள் அவர் என்ன ஆனார் என்று கண்டுபிடித்து தரவேண்டுமென உத்தரவு பிறப்பித்த நிலையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்ததன் பெயரில் சித்ரா அவரது மகள் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்படுகின்றனர். கொலையாளிகள் அளித்த தகவலின் பெயரில் கிணற்றிலிருந்து கொஞ்சு அடைக்கண் உடல் பாகங்கள் மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மனைவி பழனியம்மாள் அளித்த தகவலில் முக்கிய குற்றவாளியாக கொஞ்சு அடைக்கண் பணியற்றிய தனியார் நிறுவனத்தின் உள்ள விநாயகம் இந்த கொலைக்கு மிக முக்கிய காரணமாய் இருக்கிறார் என்றும், பணம் அளித்து உதவுகிறார் என்றும் பழனியம்மாள் காவல்துறையிடம் கூறினாலும் இன்று வரை அவரை விசாரித்து கைது செய்யாமல் காவல் துறை அவரை காப்பாற்றுகிறது என கூறப்படுகிறது.
மேலும் இந்த கொலைக்கு விநாயகம் உடந்தையாக உள்ளார். அரசியல் பலம் அவருக்கு அதிகமாக உள்ளதால் இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற காவல்துறை முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்று பழனியம்மாள் மற்றும் அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் சித்ராவின் கணவரின் பெயரும் கொஞ்சு அடைக்கண், பழனியம்மாள் கணவரின் பெயரும் கொஞ்சு அடைக்கண் என்று இருப்பதால் இதை சாதகமாக பயன்படுத்தி சித்ரா, பழனியம்மாள் கணவரின் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்த கொலை நடைபெற்றதாகவும், மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்கள்.
மேலும் காவல்துறை புகார் அளித்த உடனடியாகவே விசாரித்து கால தாமதப்படுத்தாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ எங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும். மேலும் இந்த கூலிப்படையால் தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் பழனியம்மாளும் அவரது வழக்கறிஞரும் கூறுகின்றனர். மக்களை இவ்வாறு அலைகழிக்கும் காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது. காவல்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள்.