இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நெமிலி வேட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் ரயில்வே காவல் துறையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி நெமிலி அருகே உதயகுமார், அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று உதயகுமார் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, விபத்து நடந்து ஒரு வாரம் ஆகியும் அடையாளம் தெரியாத வாகனத்தை போலிஸார் கண்டுபிடிக்கவில்லை என கூறி உறவினர்கள் திடீரென நெமிலி வேலூர் சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெமிலி காவல்துறை வாகனங்கள் குறித்து சிசிடிவி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து அதன் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். போலிஸார் வழக்கிலேயே இப்படி மெத்தனமாக இருந்தால் சாதாரண மக்களின் வழக்கு விசாரணையில் போலிஸார் எவ்வளவு அலட்சியத்துடன் செயல்படுவார் என உதயகுமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.