ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்கக் கூடிய பால்வளத்துறை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதிலும் சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஆவின் நிறுவனம் குறித்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், கள்ளக்குறிச்சி அருகே திருக்கோவிலூர் தெற்கு தெருவில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகத்தில் இருந்து வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் தவளை ஒன்று இறந்த நிலையில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானமாமலை பகுதியைச் சேர்ந்த சிவநேசன் என்பவர் வாங்கிய ஆவின் பால் பாக்கெட்டில்தான் தவளை கிடந்திருக்கிறது. அதனைக் கண்டதும் பேரதிர்ச்சிக்கு ஆளான சிவநேசன் ஆவின் முகவரிடம் முறையிட்டதோடு விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புகாரளித்தவரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துள்ளார் மண்டல பிரிவு மேலாளர் ஐயங்கரன். இந்த விவகாரம் மக்களிடையே ஆவின் நிறுவனம் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய ஆவின் பாலில் இவ்வாறு அலட்சியமாக விநியோகிப்பதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.