தமிழ்நாடு

“தி.மு.க கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?” : அடுத்தடுத்து தொகுதி பங்கீடு - பரபரக்கும் தேர்தல் களம்!

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது.

“தி.மு.க கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?” : அடுத்தடுத்து தொகுதி பங்கீடு - பரபரக்கும் தேர்தல் களம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை கேள்வி எதுவும் கேட்காமல் ஆதரித்து வந்தது அ.தி.மு.க அரசு.

மத்திய - மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து தி.மு.க வலிமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கினார்.

மாநிலத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பளித்து கூட்டு முடிவு எடுத்து போராட்டக் களத்தை சந்தித்து வந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்லாது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ்., ம.தி.மு.க., சி.பி.ஐ.எம்., சி.பி.ஐ., வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்து பெரும் வெற்றியையும் பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளாக எந்தவித சலசலப்பும் இன்றி, கூட்டணியை வழிநடத்தி வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளார். அதன்படி தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக பணிகள் நடைபெறும் வேளையில், தி.மு.க கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 6) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டிடும் வகையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலையத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. அப்போது தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து இன்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித் தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சிக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories