தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மக்கள் துயரங்களை மட்டுமே சந்தித்துள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து என எந்தத் துறையும் அ.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சியடையவில்லை. மேலும், மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் அது தமிழக மக்களுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. இதை தட்டிக் கேட்கத் துணிச்சல் இல்லாத அ.தி.மு.க அரசும் மவுனம் காத்தே வந்தது.
மத்திய - மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தி.மு.க தொடர்ந்து வலிமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற அணியை உருவாக்கினார்.
தற்போது இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது. தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் இன்று தி.மு.க தொகுதி பங்கீட்டுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வி.சி.க 6 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், "மதவாத சக்திகளை முறியடித்து தி.மு.க தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சனாதன சக்திகளை விரட்டி அடிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பரப்புரை அமையும்" எனத் தெரிவித்தார்.