பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை குற்றம் அதிகம் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துக் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்திற்கு போலிஸாரும் உறுதுணையாக இருந்ததையடுத்து, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்காமல் யோகி ஆதித்யநாத் அரசு வேடிக்கை பார்த்து வருவதாக பல்வேறு சமூக அமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பாலியல் தொல்லைக் கொடுத்தவர் மீது காவல்துறையில் புகாரளித்த பெண்ணின் தந்தையை, ஜாமினில் வெளிவந்த குற்றவாளி சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ் ஷர்மா. ஆதிக்கச்சாதி சமூகத்தைச் சேர்ந்த கௌரவ் ஷர்மா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதேப்பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஹத்ராஸ் மாவட்ட காவல்துறையிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை நடைபெற்று கௌரவ் ஷர்மா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் நீதிமன்றம் கௌரவ் ஷர்மாக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த கௌரவ் ஷர்மா உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், ஊருக்கு வெளியே உள்ள கோயிலுக்கு பெண்ணின் தந்தையை பேச்சுவார்த்தை என்றுக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு தனியாக சென்ற பெண்ணின் தந்தையை கௌரவ் ஷர்மா உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌரவ் ஷர்மா, தான் மறைத்துவைத்திருந்த கைத் துப்பாக்கியால், பெண்ணின் தந்தையை சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணின் தந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெண்ணின் தந்தை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் படி, கௌரவ் ஷர்மா உள்ளிட்ட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், குற்றம் சாட்டப்பட்ட கௌரவ் ஷர்மாவை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், தலைமறைவாகியுள்ள மற்றவர்களை போலிஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையின் போது, தந்தையின் உடலை வாங்க வந்த பாதிக்கப்பட்ட பெண், அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் தனக்கு நீதிவேண்டும் என கோரி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலகப் பரவி வருகிறது. உத்தர பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான நடக்கும் வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கையை ஆளும் யோகி அரசு எடுக்கத் தவறியதன் விளைவாக மீண்டும் இதுபோல கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.