“போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச, ஆணவத்துடன் மறுத்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி; தி.மு.கழக அரசு அமைந்ததும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்; மக்களின் இன்னலை மனதில் கொண்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வூதியதாரர்களுக்குப் பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
முதலமைச்சர் திரு. பழனிசாமியோ அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சரோ போராடும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச அடாவடியாக ஆணவத்துடன் மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கோரிக்கை விடுத்தும் கூட, முதலமைச்சர் திரு. பழனிசாமிக்குப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு நேரும் இன்னல்களை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.
ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு - பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.