தமிழ்நாடு

ராஜேஷ்தாஸ் கட்டளையை ஏற்று பெண் அதிகாரியை மிரட்டிய ‘காக்கி’ கறுப்பு ஆடுகள் : மிரட்டல் பின்னணி என்ன ?

தன் மீதான பாலியல் புகாரை பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக டிஜிபி ராஜேஷ்தாஸ் செய்த மிரட்டல் பின்னணியின் விவரம்.

ராஜேஷ்தாஸ் கட்டளையை ஏற்று பெண் அதிகாரியை மிரட்டிய ‘காக்கி’ கறுப்பு ஆடுகள் : மிரட்டல் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்டா மாவட்ட எஸ்.பியான பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தமிழகத்தின் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் மாநிலத்தில் தற்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாகியுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி டெல்டா மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியில் இருந்த போதுதான் டிஜிபியின் பாலியல் தொல்லை அரங்கேறியிருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்துக்கு முன்பே ராஜேஷ்தாஸ் அந்த பெண் ஐபிஎஸ்க்கு பலமுறை போனில் பேசி தொந்தரவு செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நெருங்கிய பெண் ஐபிஎஸ் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி கூறி வருந்தியிருக்கிறார். இதனையடுத்து அவருக்கு ஆறுதல் கூறி பாதுகாப்பாக இருக்கும்படியும் சக ஐபிஎஸ் அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே டி.ஜி.பி என்ற முறையில் ராஜேஷ்தாஸ் அவ்வப்போது அந்த பெண் ஐபிஎஸ்-க்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அதற்கு அவரும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட ஐபிஎஸும் ராஜேஷ்தாஸும் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரும் நட்பு ரீதியில் பேசுவதும் வழக்கம். அதை ஆதாயமாக எடுத்துக்கொண்டு ராஜேஷ்தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்திருக்கிறார்.

இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட பெண் ஐபிஎஸ் அதனை குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் கூறியிருக்கிறார். இதனால் மிகுந்த எச்சரிக்கையுடனே இருந்த போதுதான் கடந்த பிப்ரவரி 21ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டைக்கு சுற்றுப்பயண பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது டிஜிபியின் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது.

முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த டிஜிபி ராஜேஷ்தாஸை வரவேற்க மாவட்ட எல்லைகளில் ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியை கடக்கையில் அவரிடம் முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என்று தனது காரில் ஏறச் சொல்லியிருக்கிறார். உயரதிகாரி என்ற முறையில் காரில் ஏறிய பெண் ஐபிஎஸிடம் ராஜேஷ்தாஸ் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே காரை விட்டு இறங்கி சக ஐபிஎஸ் இருக்கும் இடத்துக்கு பதற்றத்துடன் வந்தடைந்தார் அந்த பெண்.

இதனையடுத்து, ராஜேஷ்தாஸின் செய்கையை பகிர்ந்த பெண் ஐபிஎஸ் டெல்டா மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்து வந்து உள்துறை செயலாளர் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதியிடம் ராஜேஷ்தாஸ் குறித்து பாலியல் புகார் அளித்திருக்கிறார் அந்த பெண். இதனிடையே பாலியல் புகார் கொடுக்கவிடாத படி பல்வேறு சூழ்ச்சிகளையும் மிரட்டல் வேலைகளிலும் சினிமா பாணியில் ஈடுபட்டிருக்கிறார் டிஜிபி ராஜேஷ்தாஸ்.

ராஜேஷ்தாஸ் கட்டளையை ஏற்று பெண் அதிகாரியை மிரட்டிய ‘காக்கி’ கறுப்பு ஆடுகள் : மிரட்டல் பின்னணி என்ன ?

இது தொடர்பாக The New Indian Express வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:-

“டெல்டா மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் கிளம்பிய பெண் ஐபிஎஸ் அதிகாரியை பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட ஆண் போலிஸார் நூற்றுக்கும் மேற்பட்டோரால் தடுத்து நிறுத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள கட்டடத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அதனைக் கண்டதும் கார் ஓட்டுநர் தலைதெறித்து ஓடிவிட்டார்.

அதன் பின்னர் ராஜேஷ்தாஸ் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவரிடம் கட்டாயம் நீங்கள் பேச வேண்டும் எனவும் போலிஸார் கூறியிருக்கிறார்கள். ஆனால் பெண் ஐபிஎஸ் அதிகாரியோ தன்னுடைய முடிவில் திடமாக இருந்துள்ளார். இதனால் போலிஸ் அதிகாரிகளால் அந்த பெண் ஐபிஎஸ் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார். இவ்வளவு இடைஞ்சல்களையும் மீறியே ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.

இதனிடையே பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த சம்பவத்தை பார்த்த நேரடி சாட்சி ஒருவர் கூறுகையில், மதியம் சுமார் 2 மணி இருக்கையில், 100க்கும் மேற்பட்ட போலிசார் கார் ஒன்றினை தடுத்தி நிறுத்தினார்கள். பீதியில் கார் ஓட்டுநர் உள்ளிட்டோர் தப்பியோட காவல்துறை சீருடையில் இருந்த பெண்ணின் தோளில் கை வைத்து இழுத்தபடி போலிஸ் உயரதிகாரிகள் சிலர் அருகில் இருந்த கட்டத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்குக் கூடிய பொதுமக்கள் சிலரை காவல்துறையினர் விரட்டியடித்தனர் என தெரிவித்திருக்கிறார்.

பரனூரில் நடந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் உயரதிகாரியிடம் கேட்டபோது, அதற்கு அவர்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடந்தது என மழுப்பியிருக்கிறார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த திங்களன்று நடந்திருக்கிறது. ஆனால் நேற்றுதான் (பிப்.,25) வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன் பின்னரே சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் ராஜேஷ்தாஸ் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

இப்படி இருக்கையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி D.கண்ணனிடம் கேட்ட போது, பரனூர் சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸின் வாகனத்தை நிறுத்தியதாகவும், உயரதிகாரிய உள்ள ராஜேஷ்தாஸின் உத்தரவுகளையே பின்பற்றியதாகவும் கூறினார். மேலும் முதல்வர் சுற்றுப்பயணத்திற்கான பாதுகாப்பு பணியில் இருந்தபோது உயரதிகாரிகளின் உத்தரவை மீறி கடமையை விட்டு வெளியேறியதாக கூறியதாலேயே சுங்கச்சாவடியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரம் தனிப்பட்ட பிரச்னை என்று தெரியாது. சமரச பேச்சுவார்த்தை நடத்த கூறினேனா என்பதை அந்த பெண்ணிடமே கேளுங்கள் எனவும், முதலமைச்சரின் வாகனம் வருகிறது என்பதால் ஏற்கெனவே அந்த பகுதியில் போலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தார்களே தவிர உள்நோக்கம் கொண்டு சூழவில்லை.

அதே சமயத்தில் டிஜிபி ராஜேஷ்தாஸ் தடுத்த நிறுத்த கூறிய காரை கண்டவுடன் அவரது உத்தரவுகளை மட்டுமே பின்பற்றினேன். ஆகவே அரசு அமைத்த விசாரணைக் குழு முன்பு என் பதவியை துறக்கவும் தயாராக இருக்கிறேன் என கண்ணன் கூறியுள்ளார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐபிஎஸ் சங்கம், “பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியால் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறது.

பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த செயல்களுக்கு எதிராக ஐபிஎஸ் சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம். ராஜேஷ்தாஸ் மீதான புகாரை விசாரணை குழு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories