சென்னையில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் மற்றும் மக்கள்தொகை நெருக்கமும், போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இத்தகைய சூழலில், நகரின் முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் இருந்தபோதும் கூட, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே, இதனைக் கணக்கில் கொண்டு தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தார். போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடையே பல கட்ட ஆய்வுகள் நடத்தி மெட்ரோ ரயில் திட்டம் முதன் முதலில் தி.மு.க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது.
அதன்பயனாக மெட்ரோ தனது 5 ஆண்டுகள் சேவையை வெற்றிகரமாக முடித்து, 6-ம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக தம்பட்டம் அடித்து வரும் ஆளும் அ.தி.மு.க அரசு, மெட்ரோ ரயில் சாதாரண மக்கள் பயணமே செய்ய முடியாத அளவிற்கு மெட்ரோ ரயில் கட்டணத்தை பல மடங்கு வரை உயர்த்தியுள்ளது.
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை வலியுறுத்தினார். குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
அப்போது மெட்ரோவில் பயணித்த பயணிகளிடம் குறைகளைக் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தி.மு.க எடுத்துக்கொண்ட முயற்சிகளை எண்ணி பெருமிதம் அடைகிறேன். அதற்காக நான் ஜப்பான் சென்று நிதியுதவி பெற்று வந்தேன்.
ஆனால், தற்போது இந்த மெட்ரோ ரயிலில் அதிக கட்டணத்தால் பணிநேரங்களில் மட்டுமே அதிகமானோர் பயணிப்பதாகவும், மற்ற நேரங்களில் கூட்டம் குறைவாக உள்ளது என தகவல் வந்தது. அதனை ஆய்வு செய்வதற்காக தான் தற்போதும் மெட்ரோவில் பயணித்தேன். எனவே தமிழக அரசு மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்கவேண்டும் ” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அடுத்த தினமே பாலைவனம் போல் சென்னை மெட்ரோ ரயில்கள் காட்சியளித்தது.
இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில்களின் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என மக்களுக்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்கவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், 2021ல் மெட்ரோ ரயிலின் கட்டணக் குறைவு நடவடிக்கை தேர்தல் ஆதாயத்திற்காக எடுத்த நடவடிக்கை என்றும், செயல்படாத அரசின் லட்சணம் இதுதான் என்றும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தமுறையும் தி.மு.க தலைவர் அறிவித்த பின்னரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டணத்தைக் குறைத்துள்ளதாகவும், தமிழக அரசை செயல்படவைப்பதாகவும் கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.