சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவுடி சுசீந்திரன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் உள்ளன. மேலும் காவல்துறையினரைக் கையில் வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்வதாகவும் சுசீந்திரன் மீது அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் கருணாகரன், சுசீந்தரனுக்கு கேக் ஊட்டியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஆய்வாளர் கருணாகரன் இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிக்கு சால்வை அணிவிப்பது போன்ற படம் காவல்துறையினர் சிலருக்கு வாட்ஸ்-அப்பில் வந்துள்ளது. இதைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர். மேலும் எம்.எல்.ஏ வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோருடன் ரவுடி சுசீந்திரன் இருப்பது போன்ற படங்களும் காவல்துறையினரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இருக்கம் முக்கிய ரவுடிகள் பலர் பா.ஜ.கவில் தஞ்சமடைந்து வருகின்றனர். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரவுடிக்கு சால்வை அணிவித்திருப்பது சேலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுவருவதால், இச்சம்பவம் ரவுடிகளின் ஆதரவுடன் தேர்தல் களம் காண எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.