தன்னுடன் முறையற்ற உறவில் இருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்ட கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே தனியார் விடுதி இருக்கிறது. அந்த தனியார் விடுதிக்கு வந்த ஓர் ஆணும் பெண்ணும், தாங்கள் கணவன் மனைவி என சொல்லி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
மறுநாள் காலையில் அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததோடு, கதவிடுக்கின் வழியாக லேசாக ரத்தம் வெளியேறி இருக்கிறது. இதனால் சந்தேகப்பட்டு விடுதியின் ஊழியர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் யாரும் கதவை திறக்காததால் மேலும் சந்தேகப்பட்ட விடுதி ஊழியர்கள், கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகவும், 45 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பெண் யார்? உடன் தங்கியிருந்த நபர் யார்? இவர்களை கொலை செய்ய முயற்சித்து யார்? என விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுக்கா ராயகிரி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி 35 வயதான மாலா என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அதேபோல கழுத்தறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர், சிவகிரி தாலுக்கா கரிசல்குளன் கிராமத்தைச் சேர்ந்த சந்திவியாகப்பன் என்பவரது மகன் 45 வயதான அந்தோணிராஜ் என்பதும் தெரியவந்திருக்கிறது.
அந்தோணிராஜுக்கும் மாலாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறையற்ற உறவு இருந்திருக்கிறது. கணவன் மனைவி என சொல்லிக்கொண்டு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி, உல்லாசமாக இருப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல சம்பவத்தன்றும் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளர் மாலாவும் அந்தோனிராஜும்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், மாலாவை குளியல் அறையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர், காதலியை கொலை செய்துவிட்டோமே என்ற விரக்திதில் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் என்பது தற்போதை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தற்கொலைக்கு முயன்ற அந்தோணிராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவர் சுயநினைவு திரும்பி வாக்குமூலம் அளித்தால் மட்டுமே இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.