தமிழ்நாடு

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் காதை அறுத்து காதணி திருட்டு : அ.தி.மு.க-வினரால் புலம்பிய மூதாட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்ற நிகழ்ச்சிக்குச் சென்ற மூதாட்டியின் காதை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் காதை அறுத்து காதணி திருட்டு : அ.தி.மு.க-வினரால் புலம்பிய மூதாட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன் விடுதியில் நடைபெற்ற மினி கிளினிக் திறப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பொன்னன்விடுதி மனக்கொல்லை, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கு அ.தி.மு.கவினர் சார்பாக கறி விருந்து தனியார் மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் மினி கிளினிக்கை திறந்து வைத்ததும் அங்கிருந்த பொதுமக்கள் வெட்டன்விடுதி பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற விருந்துக்காக முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஒரு சிறுவன் உட்பட பலர் காயமடைந்தனர்.

நைனான்கொல்லை பகுதியைச் சேர்ந்த ரங்கம்மாள் என்ற மூதாட்டியும் உணவருந்தச் சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் உள்ளே நுழைய முயற்சி செய்யும்போது அவரது காதணி காணாமல் போனது. காதை தொட்டுப் பார்த்தபோது காதணியோடு சேர்ந்து காதும் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

தனது காது அறுந்து காதணி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரங்கம்மாள் காதில் காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பொதுக் கூட்டங்களுக்கு கட்சி பிரமுகர்கள் கூப்பிட்டால் இனிமேல் வரவே மாட்டேன் என்று புலம்பியபடி ரங்கம்மாள் மருத்துவமனைக்குச் சென்றார்.

இதே நிகழ்ச்சியிலேயே இன்னொரு அவலமும் நிகழ்ந்துள்ளது. மினி கிளினிக் திறக்க வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தங்களது குறைகளை மனுவாக எழுதி அளிப்பதற்காக காத்திருந்தனர்.

வெட்டன்விடுதி பகுதியைச் சேர்ந்த கண்ணையா தனது மகளின் திருமண நிதி உதவிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும், உதவி கிடைக்காததால் சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க வந்திருந்தார்

இவர் லேசான மதுபோதையில் இருந்த நிலையில், மருத்துவர்களிடம் தான் அமைச்சரிடம் மனு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கண்ணையாவை தரதரவென இழுத்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் கண்ணையாவிற்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததாலேயே கண்ணையா இவ்வாறு நடந்துகொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிலர் கண்ணையாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories