நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. கடந்த 4 ஆம் தேதி 25 ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது சிலிண்டர் ரூ.785 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டு வருகிறது. டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்த இருந்த சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது. இன்று மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒரேடியாக ஒரே மாதத்தில் இரண்டு முறை அதிகளவில் சிலிண்டர் விலையை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், சிலிண்டர், சின்ன வெங்காயம் என அத்தியாவசிய தேவைகளின் விலைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாழவும் வழியில்லை என பொதுமக்கள் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்வு குறித்து ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதில், “அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக பொது மக்களிடம் இருந்து அடிக்கப்படும் கொள்ளை” எனக் குறிப்பிட்டுள்ளார்.