திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்றைய தினம் மக்களவையில், ஜப்பானிலிருந்து நிதி வரும் வரை, மதுரை எய்ம்ஸ் கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்படுமா? என்று மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ஹர்ஷ வர்த்தனிடம் விரிவான கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய டி. ஆர். பாலு எம்.பி, “முதலில் உங்களுடைய ஒப்புதலோடு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், எனது நண்பர் ஹர்ஷ் வர்த்தன் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். எங்கள் இயக்கத்தின் தலைவர் தளபதி ஸ்டாலின் சார்பாகவும், எனது கட்சியின் சார்பாகவும், பாராட்டுகிறேன்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், கொரோனா என்னும் கொடிய ஆட்கொல்லி நோயினால் உயிரிழந்த போது, அமைச்சரின் திறமையினால், வெற்றிகரமாக சமாளித்து தடுத்து நிறுத்தப்பட்டு, நாடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தமிழகம் மிகவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை, என் இதயத்தில் வழிகின்ற இரத்தத்தோடு, உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஒரு பட்டியலைப் படிக்க அனுமதிக்க வேண்டும் என அவைத் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக ஏழு மாநிலங்களில், எந்த அளவிற்கு, மத்திய அரசு இதைப் போன்ற எய்ம்ஸ் திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளது, என்பதை பார்ப்போம். நான் படிப்பது, நான் தயாரித்த பட்டியல் அல்ல. அமைச்சரின் பதிலில் உள்ளதைத்தான் படித்தேன்.
ஆந்திராவுக்கு 782 கோடிகள், மகாராஷ்டிரத்திற்கு 932 கோடிகள், மேற்கு வங்கத்திற்கு 882 கோடிகள், உத்தர பிரதேசத்திற்க்கு 702 கோடிகள், பஞ்சாபிற்கு 597 கோடிகள், அஸ்ஸாமிற்கு 341 கோடிகள், இமாச்சல பிரதேசத்திற்கு 750 கோடிகள், ஆனால், தமிழகத்திற்கு வெறும் 12 கோடிகள் மட்டுமே என்றால், இது விந்தையாக இல்லையா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், மக்களவை தேர்தலுக்கு முன், மதுரையில், 2019ஆம் ஆண்டு சனவரி 27ம் தேதி அன்று அடிக்கல் நாட்டிய, ரூபாய் 2000 கோடிக்கான எய்ம்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவ வளாகத்திற்கு ரூபாய் 12 கோடி மட்டுமே நிதி விடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கேவலமான ஒப்பீடு அல்லவா? எப்போது திட்டம் நிறைவேறும்? இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், ஒதுக்கீட்டு ரூபாய் 1000 கோடி என்று சொல்கிறார்.
அதற்கு டி. ஆர். பாலு, அதை மறுத்து, நீங்கள் கொடுத்துள்ள பதிலைத் தான் நான் படித்தேன். எது உண்மை ? ரூபாய் 1000 கோடியா அல்லது ரூபாய் 12 கோடியா? எப்படியோ திட்டம் நிறைவேறவில்லை. 204 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகும் எது தடையாக உள்ளது? ஜப்பான் நாட்டு உதவியுடன் திட்டம் நிறைவேறப் போகிறது என்று சொல்கிறீர்களே! ஏன் இந்தியப் பணத்தில் திட்டத்தை துவங்கி நடத்தக் கூடாதா? ஜப்பானிலிருந்து நிதி வரும் வரை, மதுரை எய்ம்ஸ் கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட வேண்டுமா?” என எழுப்பினார்.