தமிழகத்தின் பல மாவட்டங்களில் குரங்குகள், குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், குரங்குகளால் தஞ்சாவூரில் குழந்தை பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டராகப் பணி செய்து வரும் இவருக்கு புவனா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
புவனா, இரட்டைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த நிலையில், இன்று பிறபகல் புவனா கழிவறைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்ற குரங்கு குழந்தைகளைத் தூக்கிச் சென்றுள்ளது. சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து வந்த புவனா கத்தவே, ஒரு குழந்தையை ஓட்டில் போட்டு விட்டு, மற்றொரு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது.
குழந்தையை அப்பகுதியில் வெகுநேரம் தேடிய உறவினர்கள், வீட்டுக்குப் பின்னே அகழியில் கிடந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குரங்கு தூக்கிச்சென்ற குழந்தை இறந்ததால் தாய் புவனா கதறி அழுதது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும், அதிகாரிகளின் அலட்சியமே குழந்தை பலிக்குக் காரணம் எனவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.