தமிழ்நாடு

“எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?”: விவசாய சங்க தலைவர் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடையப் போவது முதலமைச்சர் பழனிசாமிதானே தவிர; போராடும் விவசாயிகள் அல்ல” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?”: விவசாய சங்க தலைவர் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது பழனிசாமி அரசின் காவல்துறைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் “திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து - இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"விவசாயி" என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே - தனக்குக் கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்கத் தலைவரை அராஜகமாகக் கைது செய்திருக்கும் பழனிசாமி - மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார்.

“எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?”: விவசாய சங்க தலைவர் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

"மனிதாபிமானம் கிலோ என்ன விலை" என்று விவசாயிகளிடம் கேட்கும் பழனிசாமி, 'என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்' என்பதை உள்நோக்கமாக வைத்து, இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனித நேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை!

விவசாயிக்கு ஒரு கையில் "கடன் தள்ளுபடி அறிவிப்பு" இன்னொரு கையில் கடுமையாகத் தாக்கி "கைவிலங்கு" போடுவது, என்ற முதலமைச்சர் பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது. அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடையப் போவது முதலமைச்சர் பழனிசாமிதானே தவிர; போராடும் விவசாயிகள் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories