சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடித்து பாதுகாக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னையைச் சுற்றி இருந்த பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. நீர்நிலைகள் வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போல முக்கியமானது என்பதை உணர்ந்து மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும், அவற்றை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை என தெளிவுபடுத்தினர்.
அதேபோல அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், அரசு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட எந்த காரணங்களுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
காணாமல் போன நீர்நிலைகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.